அமெரிக்காவிடம் உதவி கோரவுள்ளது கூட்டமைப்பு
இலங்கை சிறைகளில் காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவின் உதவியை நாடவுள்ளது.
இரண்டு நாள் பயணமாக நாளை சிறிலங்காவுக்கு வரவுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
தெற்கு மத்திய ஆசியாவுக்கான பிரதி இராஜாங்கச் செயலர் அதுல் கெசாப்புடன், நாளை கொழும்பு வரும் நிஷா பிஸ்வால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இதையடுத்து, நாளை மறுநாள் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேசவும் அவர் திட்டமிட்டுள்ளார்.இந்தச் சந்திப்பின் போது, பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்குத் தாம் திட்டமிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
“பல ஆண்டுகளாக எந்த விசாரணைகளுமின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 400இற்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதற்கு உதவும் படி அவரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளோம்.அரசியல் கைதிகளின் விடுதலை, மீள்குடியமர்வு ஆகிய விடயங்களை முன்னிறுத்தியே, மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிபர் தேர்தலில் ஆதரவு அளித்திருந்தோம்.
எனவே, நிஷா பிஸ்வாலுடனான பேச்சுக்களில் இந்த இரண்டு விவகாரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.” என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.அதேவேளை, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் யாழ்ப்பாணம் சென்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளார்.
தனது சிறிலங்கா பயணம் குறித்து டுவிட்டரில் எழுதியுள்ள நிஷா பிஸ்வால், புதிய அரசாங்கத்தின் தலைவர்களைச் சந்திக்க எதிர்பார்த்துள்ளதாகவும், சிறிலங்காவுக்கு எவ்வாறு அமெரிக்கா உதவ முடியும் என்றும், உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.