மஹிந்த பாவித்த வாகனங்களின் எண்ணிக்கையை தெரிந்துகொள்ள ஜோதிடரை நாடவுள்ளார் ரணில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பாவித்த வாகனங்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் சுமண தாஸவிடம் சாஸ்திரம் கேட்க வேண்டும். அத்தோடு மைவெளிச்சம் பார்க்க வேண்டிய நிலையும் ஏற்படுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நிலையியற் கட்டளை 23இன் கீழ் இரண்டின் விசேட உரையொன்றை ஆற்றினார். இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பாவித்த வாகனங்கள் இன்று நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து தினம் தினம் கண்டுபிடிக்கப்படுகின்றன.
ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக பெருந்தொகையான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தின் அருகிலுள்ள பாதையோரத்திலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் வீடுகளில் பல்வேறுவாகனத் தரிப்பிடங்களிலும் முன்னாள் ஜனாதிபதி பாவித்த வாகனங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
டிபென்டர் வாகனங்கள் உட்பட பெறுமதிமிக்க வாகனங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. சில வாகனங்கள் பழுதடைந்துள்ளன. இவ் வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதியின் சொந்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டவையல்ல. மக்கள் மீது வரிகளை சுமத்தி அதன் மூலம் பெறப் பட்ட பணத்திலேயே இவ்வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.
எனவே நாம் மக்களுக்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளோம். எனவே ஜனாதிபதி பாவித்த வாகனங்களின் தொகை எவ்வளவு? அவ்வாகனங்கள் யார் யாருக்கு எதற்காக வழங்கப்பட்டது? இவை தொடர்பாக பதிவுகள் உள்ளதா என்பது தொடர்பில் பிரதமரின் பதிலை எதிர்பார்க்கின்றேன் என்றும் அனுரதிஸாயக்க எம்.பி. தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீங்கள் கேட்ட கேள் விகளுக்கு பதில் வழங்குவதற்கு எம்மிடம் எதுவிதமான தரவுகளும் இல்லை. ஜனாதிபதி எத்தனை வாகனங்களை பாவித்தார் ? வாகனங்கள் யார் யாருக்கு வழங்கப்பட்டது? எங்கு நிறுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பில் எவ்விதமான தகவல்களும் இல்லை.
கம்பனிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்களின் தொகை எவ்வளவு என்பதும் தெரியாது. 100, 1000, ஒரு இலட்சம் வாகனங்கள் பாவிக்கப்பட்டதா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.இவ் வாகனங்கள் தொடர்பாக எவ்விதமான பதிவேடுகளும் இல்லை.
எனவே இவை தொடர்பாக எதிர்காலத்தில் விசாரணைகள் நடத்தப்படும். தேவையெனில் பாராளுமன்றத்தில் நாமனைவரும் இணைந்து இது தொடர்பாக ஆராய வேண்டும்.இல்லாவிட்டால் சுமணதாஸவை அழைத்து சாஸ்திரம் கேட்க வேண்டும். அவராலும் முடியா விட்டால் மைவெளிச்சம் தான் பார்க்க வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.