அறிக்கை ஒத்திவைக்கப்பட்டமைக்கு சம்பந்தனே காரணம் - சுரேஷ் தெரிவிப்பு
ஸ்ரீலங்கா மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை அறிக்கையை 6 மாத காலத்திற்கு ஐ.நா பிற்போட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனே காரணம் என கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டினார்.
அவர் தொடர்ந்து இது குறித்து தெரிவிக்கையில்,
கூட்டமைப்பின் தலைவர் என்ன மாதிரியான மனோநிலையில் இருக்கின்றார் என்பது எனக்குத் தெரியாது. சர்வதேச விசாரணையின் முக்கியத்துவத்தை கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக வலியுறுத்தியவர் அவர்.
அது மாத்திரமல்லாமல் நேற்று வரை இந்த விசாரணை அறிக்கை வர வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில் திரு. சம்பந்தன் அவர்கள் ஐ.நா அறிக்கை பிற்போடப்பட்டமை தொடர்பாக மகிழ்ச்சியுமில்லை, கவலையுமில்லை எனக் கூறியதன் அர்த்தத்தை நிச்சயமாக அவரிடமே கேட்க வேண்டும்.
திடீரென அவருக்கு எப்படி மாற்றம் ஏற்பட்டது? என்ன தேவைக்காக அந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது எனக்கு உண்மையில் தெரியாது. ஆகவே இந்த அறிக்கை வெளிவிடாமல் பிற்போடப்பட்டதற்கு கவலையில்லை என்றால் அது குறித்து அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ் மக்களது தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர் இப்படிக் கூறுவது காலம் தாழ்த்தப்பட்டதற்குரிய விடயங்களை ஏற்றுக் கொள்கின்றாரோ என்ற சந்தேகம் இருக்கின்றது எனக் கூறினார்.