நுகேகொடையில் இனவாத கூட்டமொன்றே நடைபெற்றது - அசாத் சாலி
நுகேகொடை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஓர் இனவாத அடிப்படையிலான கூட்டமாகும் என மத்திய மாகாண ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
அரசியல் கூட்டமொன்றுக்கு 5000த்திற்கும் மேற்பட்ட மக்களை திரட்டுமாறு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு சவால் விடுத்திருந்தேன்.எனினும் நுகேகொடவில் நடைபெற்ற கூட்டமானது ஓர் இனவாத அடிப்படையிலான கூட்டமேயாகும்.
பொதுபலசேனா உள்ளிட்ட அமைப்புக்கள் சமூக வலைத்தளங்களின் ஊடாக இந்தக் கூட்டத்திற்கு இனவாத அடிப்படையில் அழைப்பு விடுத்திருந்தது. இனவாத அடிப்படையில் அன்றி அரசியல் ரீதியாக மக்களை திரட்டியிருந்தால் நான் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதாக விடுத்த சவாலை ஏற்றுக்கொண்டிருப்பேன்.
இந்தக் கூட்டம் அரசியல் ரீதியான கூட்டமன்று, இது முழுக்க முழுக்க ஓர் இனவாத அடிப்படையிலான கூட்டமாகும்.இனவாதத்தை தூண்டும் வகையிலான அறிக்கைகளை விட்டு மக்கள் திரட்டப்பட்டுள்ளனர்.விமல் வீரவன்ச தனது காரியாலயத்திலிருந்து அரசியல் ரீதியான கூட்டமொன்றுக்கு ஐயாயிரம் பேரை அழைத்திருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியும்.
தனியார் பேரூந்துகளில் இனவாத அடிப்படையில் மக்களை அழைத்து நடத்தப்படும் கூட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அசாத் சாலி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.நுகேகொடையில் நடைபெறும் கூட்டத்திற்கு ஐயாயிரம் பேரை அழைத்து வந்தால் அரசியலிலிருந்து விலகுவதாக முன்னதாக அசாத் சாலி சவால் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.