Breaking News

சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றது ஏன்? – விளக்கம் தருகிறார் சம்பந்தன்

கொழும்பில் நேற்று நடைபெற்ற சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் நிகழ்வில் தாம் பங்கேற்றதை நியாயப்படுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த 43 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் பங்கேற்றுள்ள முதல் தமிழ்த் தேசிய அரசியல் தலைவரான இரா.சம்பந்தன் தான் எதற்காக இந்த நிகழ்வில் பங்கெடுத்தேன் என்பதை பிபிசிக்கு விபரித்துள்ளார்.

இந்த விழாவில் பங்கேற்பது குறித்து கவனமாக சிந்தித்த பின்னரே தான் முடிவெடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.“நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், தமிழ் மக்களின் எதிர்காலம், புதிய ஆட்சியாளர்கள் மீதுள்ள நம்பிக்கை ஆகியவற்றின் காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று சுதந்திர நாள் விழாவில் பங்கேற்பது என்று முடிவெடுத்தேன்.

அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே இது குறித்து மாற்றுக் கருத்துக்கள் இருந்தன.எனினும் இது தொடர்பாக, மூத்த தலைவர்கள் பலருடனும் கலந்துரையாடினேன். அவர்கள் அனைவரும் எனது முடிவை ஏற்றுக் கொண்டனர் என்று கூறமாட்டேன்.

முந்தைய ஆட்சிபோல் அல்லாமல், இந்த ஆண்டின் சுதந்திர நாள் நிகழ்வு, இராணுவ வெற்றியை மையப்படுத்தியதாக இருக்கவில்லை.அப்படியான சூழலில் இந்த நிகழ்வில் பங்கேற்பது நாட்டில் வாழும் எல்லா மக்களுக்கும் ஒரு நல்ல செய்தியை அனுப்பும்.

இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்படும் வகையிலும், மக்கள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த ஆண்டின் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டிருந்தன” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.