Breaking News

போர்குற்ற விசாரணை அறிக்கையை ஒத்திவைத்தத் தீர்மானம் சரியானது - பிரித்தானியா

ஐ.நா வின் போர் குற்ற விசாரணை அறிக்கையை மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்காது ஒத்திவைப்பதற்கானத் தீர்மானம் சரியானது என சிறிலங்காவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் லோரா டேவிஸ் தெரிவித்துள்ளார். 

போர்குற்றம் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாதக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவிருந்த அறிக்கையை செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயீட் ராத் அல் உசைன் தீர்மானித்தார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் ஆட்சியில் இருக்கம் மைத்ரி – ரணில் அரசாங்கத்தினால் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி மற்றும் ஐ.நா செயலாளர் நாயகம் ஆகியோரை நேரில் சந்தித்து தெளிவுபடுத்திய மறுநாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் போர் குற்ற விசாரணை அறிக்கையை ஒத்திவைக்கும் முடிவை அறிவித்திருந்தார்.

இந்த தீர்மானத்தை வரவேற்றுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகர் லோரா, சிறிலங்காவின் புதிய அரசாங்கம், பொறுப்புக்கூறும் கடப்பாட்டை நிறைவேற்றும் விடையத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து செயற்படுவதில் அக்கறை செலுத்தி வருவது வரவேற்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.

சிறிலங்கா குறித்த போர் குற்ற விசாரணை அறிக்கையை தயாரிப்பதற்காக தகவல்களை வழங்கியவர்கள் குறித்த அறிக்கை வெளிவராததையிட்டு கவலையடைந்துள்ள போதிலும், குறித்தத் தீர்மானம் சரியானது என்பதை கூறிக்கொள்ள தான் விரும்புவதாகவும் லோரா மேலும் தெரிவித்துள்ளார்.