மன உளைச்சலில் மகிந்த!
ஸ்ரீ ஜயவர்தனபுரவில் இன்று நடைபெற்ற இலங்கையின் 67வது சுதந்திர தின விழாவில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அதில் கலந்து கொள்ளவில்லை.
உடல் நல குறைவு காரணமாகவே மகிந்த ராஜபக்ஷ இன்றைய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் வசித்து வரும் மகிந்த விசேட மருத்துவ பரிசோதனைக்காக கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புக்கு வந்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி கடும் மன உளைச்சலில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால், உத்தியோகபூர்வ நிகழ்வுகள், செயற்பாட்டு ரீதியான அரசியல் செயற்பாடுகளில் இருந்து முற்றாக ஒதுங்கி ஓய்வெடுக்குமாறு அவரது மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியிருப்பதாக முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
அதேவேளை அரசியல் வங்குரோத்து நிலையை அடைந்துள்ள சில அரசியல்வாதிகள் இணைந்து நாளைய தினம் தேசப்பற்றுள்ள அரசியல் முன்னணி ஒன்றை ஆரம்பிக்க உள்ளனர்.
அத்துடன் மீண்டும் மகிந்தவின் வருகைக்கு நீங்கள் தயாரா? என்ற தொனிப்பொருளில் கருத்தரங்குகளையும் நடத்த அவர்கள் தீர்மானித்துள்ளனர்.இந்த கருத்தரங்குகளில் கலந்து கொண்டு வங்குரோத்து அரசியல்வாதிகளின் பிடியில் சிக்க வேண்டாம் என ராஜபக்ச குடும்பத்தினர் முன்னாள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ள அரசியல்வாதிகள் மகிந்த ராஜபக்சவின் தோளில் கால் வைத்து மீண்டும் ஒரு முறை நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயற்சிப்பதாக குடும்பத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புதிய அரசியல் முன்னணிக்கு ராஜபக்ச குடும்பத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.