Breaking News

இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று தேர்தல் பரப்புரைகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கு வரும் 28ம் திகதி நடக்கவுள்ள தேர்தலுக்கான பரப்புரைகள் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ளன.

ஆனாலும்  இந்த தேர்தலில் அரசியல் கட்சிகளும், வாக்காளர்களும் ஆர்வம் காட்டவில்லை என்று உள்ளூர் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. 2011ம் ஆண்டு  நாட்டின் பிற உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்ட போது  இந்த இரண்டு பிரதேசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும்  வேட்புமனுக் கையளிக்கப்பட்ட பின்னர்  மேல்முறையீட்டு மனுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து தேர்தல் இடைநிறுத்தப்பட்டது. இந்த தேர்தல் வரும் 28ம்திகதி  முன்னைய வேட்புமனுவின்படியே நடைபெறும் என்று  இலங்கை தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இன்று நள்ளிரவுடன் தேர்தல் பரப்புரைக்கான காலம் முடிவடையவுள்ள நிலையில், புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச்சபை பகுதிகளில் மக்கள் தேர்தலில் ஆர்வம்காட்டவில்லை என்று கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

2011ம் ஆண்டு வேட்புமனுக்களின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுவதும் இந்த ஆர்வமின்மைக்கு முக்கிய காரணம் என்றும், அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் இதனை விரும்பவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் மட்டும் பரப்புரையில் ஈடுபடுவதை அவதானிக்க முடிவதாகவும், ஒட்டுசுட்டான், கரைத்துறைப்புற்று பகுதிகளில் வேட்பாளர்களின் சுவரொட்டிகளை காண முடிவதாகவும் கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

சிங்களவர்கள் அதிகம் வாழும் வெலிஓயா பகுதியில் ஐ.தே.க மட்டும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அமைச்சர் ரிசாத் பதியுதீன் விலகி விட்டதாலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிறுத்திய இரண்டு வேட்பாளர்களும் போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டதாலும்  அதன் பரப்புரைகள் முடங்கிப் போயுள்ளன.

ஜேவிபி கரைத்துறைப்பற்றில் சுவரொட்டிப் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசசபையில் உள்ள 12 ஆசனங்களுக்காக நடைபெறவுள்ள தேர்தலில் 29,269 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இங்கு 45 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

கரைத்துறைப்பற்று பிரதேசசபையின் 15 ஆசனங்களுக்காக தேர்தலில், 23,489 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் புகுக்குடியிருப்பில், 5 அரசியல்கட்சிகள், 1 சுயேட்சைக் குழு சார்பில் 72 வேட்பாளர்களும், கரைத்துறைப்பற்றில் 6 அரசியல் கட்சிகளின் சார்பில் 90 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

இதனிடையே 2011ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவில் இடம்பெற்றிருந்த பல வேட்பாளர்கள் மரணமாகி விட்டனர். பலர் வெளிநாடு சென்று விட்டனர். இன்னும் பலர் போட்டியிட விரும்பவில்லை. புதுக்குடியிருப்பில் தமிழரசுக் கட்சியின் தலைமை வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த வீரவாகு கனகசுந்தரசுவாமி பின்னர் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதுடன் அண்மையில் மரணமாகிவிட்டார்.

அதுபோல, கரைத்துறைப்பற்று பிரதேசசபைத் தேர்தலில் தலைமை வேட்பாளராக தமிழரசுக் கட்சியால் நிறுத்தப்பட்ட அன்ரனி ஜெகநாதன் தற்போது வடக்கு மாகாணசபை உறுப்பினராக இருக்கிறார். அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக கரைத்துறைப்பற்று பிரதேசசபைக்கு போட்டியிட்ட இருவரும் மரணமாகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.