Breaking News

தமிழ் மக்களை ஐ.நா ஏமாற்றிவிட்டது - சர்வதேச மன்னிப்பு சபை

ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடுவது பிற்போட்டுள்ளதால் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க வாய்ப்பிருப்பதாக லண்டனை தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மன்னிப்புசபை சுட்டிக்காட்டியுள்ளது.

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள், கொலைகள், சட்டவிரோத கைதுகள், காணாமல் போதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஐ.நாவின் விசாரணை அறிக்கையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் வலயப் பணிப்பாளர் ரிச்சட் பெனட் தெரிவித்துள்ளார்.

எனினும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்தத் தீர்மானத்தினால் அவர்களுக்கு தற்போது ஏமாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்காவின் புதிய அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து உரிய தகவல்களை பெற்று உண்மைக் குற்றவாளிகளை சட்டத்துக்கு முன் கொண்டு வந்தால் மாத்திரமே ஐ.நாவின் இச்செயல் நியாயப்படுத்தக்கூடியதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த யுத்தத்தின்போது இடம்பெற்ற சம்பவங்களின் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என பிரித்தானிய வெளிவிவகார அலுவலக அமைச்சர் ஹிகோ ஸ்வைர் (hugo swire) வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா தொடர்பான விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை எதிர்வரும் 6 மாதங்களுக்கு பிற்போட்டுள்ளமை தொடர்பில் அமைச்சர் ஹிகோ ஸ்வைர் கருத்து வெளியிட்டுள்ளார்.