Breaking News

புதிய அரசுக்கு ஏழரைச் சனி பிடிக்கும்! ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை

ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தப்படாவிட்டால் சகல அதிகாரங்களையும் கைவிட்டு வெளியேறிச் செல்ல புதிய அரசாங்கம் ஆயத்தமாக வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பாரியளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பில் லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவில் இன்றைய தினம் ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் ஊழலுக்கு எதிரான முன்னணி முறைப்பாடு செய்திருந்ததோடு பல மில்லியன் ரூபா பெறுமதியான பாரிய நிதி மோசடிச் சம்பவங்கள் ஏழு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா டெலிகொம், இலங்கை தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகம், துறைமுக அதிகார சபை, வளிமண்டலவியல் திணைக்களம், எப்பாவெல பொஸ்பேட் நிறுவனம், பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம், வானத்தவில்லு பிரதேச சபையில் இடம்பெற்ற மோசடிகள் உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளை புதிய அரசாங்கம் காலம் தாழ்த்தினால் அதிகாரங்களை கைவிட்டு வீட்டுக்கு செல்ல நேரிடும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த சிறி வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பான விசாரணைகளை தாமதப்படுத்தினால் அரசாங்கத்திற்கு ஏழரைச் சனி ஆரம்பமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.