விசாரணை அறிக்கை தாமதமாகுமா? – கருத்துக் கூற மறுத்த ஐ.நா பேச்சாளர்
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை வெளியிடுவது தாமதிக்கப்படுமா என்பது குறித்து கருத்து வெளியிட ஐ.நா மறுத்துள்ளது.
போர்குற்றங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை வரும் மார்ச் 25ம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சிறிலங்காவின் புதிய அரசாங்கம், உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்க கால அவகாசம் தரும் வகையில், இந்த விசாரணை அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடுமாறு கோரியுள்ளது.
அமெரிக்காவும் இதற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது தாமதமாக வாய்ப்புள்ளதா என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ருபேர்ட் கொல்வில்லிடம், ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நேற்று கேள்வி எழுப்பியிருந்தது.
எனினும், அந்தக் கேள்விக்கு அவர் எந்தக் கருத்தையும் வெளியிட மறுத்துள்ளார்.இதற்கிடையே, அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளை நியுயோர்க்கில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
இதன்போதும் அவர், ஐ.நா விசாரணை அறிக்கையை பிற்போடுமாறு கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.