இராணுவத்தின் உதவியுடன் முல்லையில் சிங்களவர் சட்டவிரோத மீன்பிடி
இராணுவத்தின் உதவியுடன் தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறை மூலம் தென்பகுதி மீனவர்கள் கடற்றொழில் செய்வதால் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகிறார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இதனை தடுப்பதற்கு வடமாகாண மீன்பிடி அமைச்சர் மத்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்குப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியமை தொடர்பாக தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், வடபகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்த வண்ணம் உள்ளார்கள். இந்திய மீனவர் பிரச்சினை ஒருபுறம், தென் இலங்கை மீனவர் பிரச்சினை என பல இடர்களை சந்தித்துவருகிறார்கள்.
குறிப்பாக இலங்கையில் தடை செய்யப்பட்ட மீன்படி முறைகளைப் பயன்படுத்தி தென்னிலங்கை மீனவர்கள் இராணுவத்தினரின் பின்புலத்துடன் தொழிலை செய்வதனால் மீன்வளம் குன்றி வருகின்றது.
இத்தகைய பிரச்சினை பாரிய தொன்றாகும். குறிப்பாக தடை செய்யப்பட்ட தொழில் முறையை பயன்படுத்துவது ஏற்க முடியாத ஒன்றாகும். இத்தகைய பிரச்சினையை வடமாகாணத்திற்குப் பொறுப்பான மீன்பிடி அமைச்சர் மத்திய கடற்றொழில் அமைச்சருடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் தாமும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வடமராட்சி கிழக்கு மக்கள் இப்பகுதி வீதிகள் தொடர்பாகவும் போக்குவரத்து தொடர்பாகவும் தனது கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.