Breaking News

நீண்டகாலத்தின் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலை எழுச்சி கண்டது (நேரடி இணைப்பு))

நீண்டகாலத்தின் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலை எழுச்சி கண்டது. யாரும் எதிர்ப்பார்த் திருக்கவில்லை இவ்வளவு மக்கள் பேரெழுச்சியுடன் தம் மீது இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகத் தெருவில் இறங்குவார்கள் என்று.

இலங்கைக்கு எதிரான ஐ.நா விசாரணைகள் தள்ளிப்போடப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்தியிருந்தது. சர்வதேச சமூகம் மீதான முழு நம்பிக்கையையும் இழந்துபோகுமளவுக்கு வெறுமையை உணர்ந்தார்கள். இதனை தெளிவாக விளங்கிக்கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் தன் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றியது.

தமிழ் மக்கள் இப்போது அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்யும் போராட்டங்களுக்குப் பெரிதாக ஆதரவு வழங்காத விரக்தி மனநிலைக்கு வந்துவிட்டனர். எனவே மக்களை அரசியல் கட்சிகளின் தலைமைத்துவத்தின் கீழ் அணிதிரட்டுவது மிகக்கடினமான விடயம். எனவேதான் யாழ். பல்கலைக்கழக சமூகம் தனக்கிருக்கின்ற பங்கை சரியான நேரத்தில் எடுத்துக் கொண்டது.




அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு அமைதிப் பேரணி நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் போன்றன இதற்கு ஆதரவை வழங்கின. குறிப்பிட்டபடி,சரியான நேரத்தில் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திலிருந்து மூத்தோரின் ஆசியுடனும், சடங்காசார முறையுடனும் ஆரம்பமானது.

மதகுருமார்கள், சிவில் சமூக அமைப்புக்கள், மாணவர்கள், அரசியல்கட்சிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என அணிவகுத்து பல்கலைக்கழக வளாகத்தை விட்டு இராமநாதன் வீதியை அடைந்தது பேரணி. வீதியில் நின்றவர்களும் பேரணியுடன் கலக்க, பல்லாயிரக்கணக்கான மக்களின் அமைதி நடைபயணம் பதாதைகளைத் தாங்கியபடி பலாலி வீதியை அடைந்தது. அங்கிருந்து பயணித்த பேரணியாளர்கள் ஆலடி சந்தி கடந்து கந்தர்மடம் சந்தி வழியாக நல்லூர் ஆலயத்தை நோக்கி நகர்ந்தனர். மேலும் பேரணியில் கலந்துகொண்ட மக்கள் தொகை அதிகரித்தது. போக்குவரத்து நெரிசலை கவனத்தில் கொண்டு ஒழுங்கான முறையில் மூவர் மூவராக சேர்ந்து வரிசையாக அனைவரும் நடந்தனர். சில கிலோமீற்றர்கள் அளவிற்கு பேரணியாளர்களின் ஊர்வலம் நகர்ந்தது.

அப்படியே நகர்ந்து நல்லூர் பின்வீதியை அடைந்தவர்கள், அந்தத் திடலில் கூடினர். காணாமல் போனவர்களின் பெற்றோர், உறவினர் பேரணியாளர்களுக்கு முன்வரிசையில் வந்து அழுது அரற்றினர். அந்தக் காட்சி மிகவும் உறுக்கமானதாக, அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாகவும், வேதனைப்படுத்துவதாகவும், சர்வதேசத்தின் மீது தமிழர்களின் கூட்டு கோபத்தை வெளிப்படுத்துவதாகவும் இருந்தது. பாதிரியார்கள் மக்களை ஆறுதல்படுத்தினர்.

தொடர்ந்து சிறு அரங்கு போன்ற உயர் அடைவிடத்துக்கு, யாழ்.பல்கலைக்கழக சமூகத்தை சேர்ந்தவரும், நிகழ்வின் ஏற்பாட்டாளருமான இராஜகுமாரன், சிவில் சமூக அமையத்தின் தலைவர் வணக்கத்துக்குரிய ஆண்டகை இராயப்பு யோசப்பு, சர்வதேச இந்து மத ஒன்றியத்தின் தலைவர், யாழ்.பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய செயலர் துசிந்தன் ஆகியோர் வந்தனர். ஐ.நாவுக்கு சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையை இராஜகுமாரன் வாசித்தார். வாசித்து முடிந்ததும், அதனை ஐ.நாவுக்கு வழங்குவதற்கா மத பெரியார்களிடம் கையளித்தார். அவர்கள் அதனைப் பெற்றுக்கொண்டதும், பேரணி முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.


இந்த பேரணி முடிவுற்றதும் ஊடகங்களுக்கான கருத்துக்களை ஏற்பாட்டாளர்கள் வழங்கினர். அதில் கலந்துகொண்ட பேராயர் ராயப்பு யோசப்பு கருத்துவெளியிடுகையில்,

“இறுதி யுத்தத்தின் போது பாதுகாப்பு வலயம் என்று அரசு அறிவித்த பகுதிக்குள்ளேயே அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தது சிங்கள அரசு. இறுதிப் போரில் மட்டும் ஒரு லட்சத்து 46 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டப்பட்டனர். இது மிகப்பெரும் மனித இனப்படுகொலை ஆகும். இவ்வாறு யுத்தத்தின் போது மனித உரிமைகளை இலங்கை இராணுவம் மீறியது. யுத்த சூனிய வலயங்களை அறிவித்து அதற்குள் புலிகள் இருக்கின்றனர் எனக் கூறி மக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இது எதற்காக என்றால் புலிகளை மக்கள் வெறுக்கவும், தாங்கள் இந்த மீறல்களை செய்யவில்லை புலிகளே செய்தனர் என சர்வதேசத்திடம் கூறித் தப்பவுமே.

யுத்தத்துக்குக் கட்டளையிட்ட போர்க் குற்றவாளியான மஹிந்த ராஜபக்‌ஷவே போர் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் குறித்து விசாரணை செய்ய குழு ஒன்றை நியமித்தார். குற்றவாளியே நீதிபதியாக இருக்கும் நிலைதான் இது. இவர்களிடம் இருந்து எமது மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி நம்புவது. புதிய அரசாங்கத்தை மக்கள் நம்புகின்றனர். 

ஆனால் தமிழருக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து விசாரணை விடயத்தில் புதிய அரசாங்கத்தில் மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை. இந்நிலையிலேயே தமிழ் மக்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை இறுதி அறிக்கையில் தமக்கு நீதி கிடைக்கும் என நம்பினர். ஆனால் இந்த அறிக்கை மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படாமல் பிற்போடப்பட்டமை தமிழருக்கு ஏமாற்றமே. தாமதிக்கும் நீதி மறுக்கப்ட்ட நீதிக்கு சமம் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த அறிக்கையை உடன் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்- என்றார்.



அங்கு, இந்தப் போராட்டதின் மூலம் சர்வதேசத்துக் நீங்கள் சொல்ல விளைவது என்ன என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பேரணியின் ஏற்பாட்டாளரும், யாழ்.பல்கலைக்கழக சமூகத்தை சேர்ந்தவருமான அ. இராஜகுமாரன்.,

“இந்தப் போராட்டத்தின் மூலம் சர்வதேசத்துக்கு சொல்ல விளைவது என்னவென்றால் இலங்கையில் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், சட்டவிரோத தடுத்து வைப்புக்கள், கடத்தல்கள் பாரிய அளவில் நடந்துள்ளன. அவை இனப்படுகொலைக்கு சமமானவை. இவை எந்தக் காரணத்தினாலும் உள்ள விசாரணை பொறிமுறையொன்றினால் விசாரித்து தீர்வுகாணப்படமுடியாதவை. காரணம் இன்றைய அரசில் இருப்பவர்கள் நேற்றைய அரசில் இருந்தவர்கள். தமிழர்களுக்கு எதிரான இத்தனை இனப்படுகொலைக்கும் காரணமாக, ஒத்தாசையாக இருந்தவர்கள். இந்தநிலையில் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தருவதற்கு உள்ளகவிசாரணை எந்தவகையிலும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியை வழங்கும் என்பதில் நம்பிக்கை இழந்து இருக்கின்றோம். இந்தவிடயத்தில் சர்வதேச சமூகம் தமது நலனைக் கருத்தில்கொண்டு போலியாக செயற்படக்கூடாது. நவிபிள்ளைக்கு பின்னர் ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளராக வந்தவர் மிக இறுக்கமானவராகவும், நடுநிலை தவறாதவராகவும் இருப்பார் என்று சொன்னபோது மிகவும் சந்தோசப்பட்டோம். பக்கம் சராதீர்கள். உலகம் முழுவதும் பாதிக்கப்ட்ட மக்கள் விடயத்தில் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள். ஈழத்தமிழர்கள் மிகமோசமான அடக்குமுறைக்குள்ளாகியிருக்கிறார்கள். உயிரிழப்புக்கள், சொத்திழப்புக்களை தொடர்ச்சியாக சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே தமிழர் விடயத்தில் நேர்மையான போக்கை கடைபிடியுங்கள். அப்படியொரு நிலை வரும்வரை தொடர்ச்சியாக ஜனநாயக வழியில் போராடுவோம். அது உங்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனாலும் எங்கள் போராட்டங்கள் நீதி கிடைக்கும் வரை தொடரும்”.

இராணுவ அச்சுறுத்தல் ஏதும் இருந்ததா?

“ஆட்சி மாற்றம் நிகழ்ந்தபின்னரும், இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட பின்னரும் முன்புபோல அச்சுறுத்தல்கள் எதுவும் விடுக்கப்படவில்லை. ஆனால் நேற்று இரவு யாழ்ப்பாணத்துக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்தப் போராட்டம் குறித்து வினவினார். இப்படியொரு ஜனநாயகப் போராட்டத்துக்கு பொலிஸாரின் விசாரிப்பே தேவையில்லை என்று நான் கருதுகின்றேன் ” – என்றார்

இந்தப் பேரணியில் நீண்ட இடைவெளியின் பின்னர் அதிகளவான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களை வழிநடத்தியும், நிகழ்வை ஒழுங்குபடுத்தியவருமான யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் தசிந்தன் எமது கேள்விக்குப் பதிலளித்தார்.

“ இன்றையை நிலையில் தமிழர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் இருக்கிறார்கள். இந்த ஐ.நா விசாரணை பிற்போடப்பட்டமை வேதனையை அளித்தது. இந்த இடத்தில் இலங்கை அரசாங்கத்தை நம்பி நாம் இல்லை என்பதை தெளிவாகக்கூறிக்கொள்கிறோம். எமது மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டும். இதற்கான விசாரணை சர்வதேச மட்டத்தில் நடக்க வேண்டும். நீதியான தீர்வொன்று தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும் இந்த நோக்கோடு யாழ். பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் இன்று இந்தப் பேரணியை ஒழுங்குபடுத்தினோம். நாம் எதிர்பார்த்ததை விட பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது உரிமையை சர்வதேசத்துக்கு சொல்ல, நீதியை நிலைநாட்ட எம்மோடு அணிதிரண்டிருக்கிறார்கள். எமக்கெதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று வேண்டும் எ என்பதை அடித்துக்கூறியிருக்கிறார்கள். இதனை உலகம் விளங்கிக்கொள்ள வேண்டும் ” – என்றார்.