Breaking News

வடக்கு, கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகளை மீளாய்வு செய்கிறார் பாதுகாப்பு அமைச்சர்

வடக்கு, கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக, சிறிலங்காவின் புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, இந்த வாரம் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

வடக்கு, கிழக்கின் கள நிலைமைகள் தொடர்பாக மீளாய்வு செய்யும், புதிய அரசாங்கத்தின் திட்டத்துக்கு அமையவே, அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

வரும் 6ம் நாள் பலாலிப் படைத்தளத்துக்குச் சென்று, யாழ்.படைகளின் தலைமையகத்தில், பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக படை அதிகாரிகளின் கருத்துக்களை அவர் அறிந்து கொள்வார்.அதையடுத்து, மறுநாள், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா படைத் தலைமையகங்களில், இராணுவ அதிகாரிகளின் கருத்துக்களை அறிந்து கொள்ளும் முயற்சியில் அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஈடுபடவுள்ளார்.

வரும் 8ம் நாள் திருகோணமலைக்குச் செல்லும் அவர் கிழக்குப் படைத் தலைமையகத்திலும் இதுபோன்ற சந்திப்புக்களில் ஈடுபடுவார்.

புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவுக்கு வடக்கு,கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிப்பதில், சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் ஆர்வத்துடன் இருப்பதாக, இராணுவ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதாக புதிய அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.