Breaking News

இரகசிய முகாம் என்ற ஒன்றும் இல்லை! கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தகவல்

திருகோணமலையில் கடற்படையின் கட்டுப்பாட்டில் எவரும் தற்போது இல்லை என்று கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். 

திருகோணமலையில் ‘கோட்டா’ தடுப்பு முகாமில் 700 பேர் வரையிலும், திருகோணமலை கடற்படைத்தளத்தில் 35 குடும்பங்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளன என்றும் இது தொடர்பில் புதிய அரசு உடன் விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

சுரேஷ் எம்.பியின் இந்த உரை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே கடற்படையின் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் அறிந்த வகையில் திருகோணமலை கடற்படை முகாமில் 35 குடும்பங்களோ அல்லது 700 தமிழர்களோ தடுப்பில் இல்லை. ஏனெனில் தற்போது கடற்படையின் தடுப்பில் எந்தவொரு நபரும் இல்லை.

அத்துடன் 700 பேரை தடுத்துவைப்பதற்குரிய வசதிகளும் அங்கு இல்லை. திருகோணமலை கடற்படை முகாமில் ‘கோட்டா’ என்ற பெயரில் இடம் ஒன்று இருப்பதனை நான் அறியவில்லை. கோட்டபாய என்ற பெயரில் எமது கடற்படை முகாம் ஒன்று முல்லைத்தீவில் மட்டுமே உள்ளது. அங்கு 700 பேரையோ அல்லது 35 குடும்பங்களையோ கடற்படையினர் தடுப்பில் வைத்திருக்கவில்லை” – என்றார்.