Breaking News

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டமைப்பு இன்று சந்திப்பு

கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து செயற்படுவதா? இல்லையா? என்பது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் குழுவுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றையதினம் நடைபெறவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கட்சியில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.அதேநேரம், கிழக்கு மாகாணசபையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முஸ்லிம் காங்கிரஸ் விடுத்திருக்கும் அழைப்பைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

முதலமைச்சர் பதவிப்பிரமாணம் செய்வதற்கு முன்னர் இந்த அழைப்பை விடுக்காமல் முஸ்லிம் காங்கிரஸ் தவறிழைத்துவிட்டது. இருந்த போதும் நல்லெண்ணத்தை வெளிக்காட்டும் வகையில் முஸ்லிம் காங்கிரசின் அழைப்பை பரிசீலிக்கத் தயாராக இருக்கின்றோம்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி தீர்மானமொன்று எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.