இங்கிலாந்தை துவம்சம்செய்த நியூசிலாந்து 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி
ரிம் சௌத்தி பந்துவீச்சில் மிரட்ட இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிகொண்டது நியூசிலாந்து அணி.
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில், 11 ஆவது உலகக் கிண்ணத் தொடர் இடம்பெற்று வருகின்றது. நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் பகலிரவுப் போட்டியாக இன்று நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 9ஆவது லீக் ஆட்டத்தில்‘ஏ’ பிரிவில் இடம்பெற்ற இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் ஒன்றையொன்று சந்தித்தன.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.அதன்படி களமிங்கிய இங்கிலாந்து அணிக்கு நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ரிம்சௌத்தி சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தில் தடுமாற சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.
துடுப்பாட்டத்தில் தடுமாறிய இலங்கிலாந்து அணி 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் ஜோய் ரூட் 46 ஓட்டங்களையும் மொய்ன் அலி 20 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.
நியூசிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய ரிம் சௌத்தி 9 ஓவர்கள் பந்துவீசி 33 ஓட்டங்களைக் கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.இதையடுத்து 124 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, அதிரடி ஆட்டக்காரர் பிரண்டன் மெக்கலத்தின் சாதனை அரைச்சதத்தின் உதவியுடன் 2 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
நியூசிலாந்து அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கை அடைந்து 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.நியூசிலாந்து அணி சார்பாக அணித் தலைவர் பிரண்டன் மெக்கலம் 18 பந்துகளில் அரைச்சதமடித்து உலகக்கிண்ணத்தில் தனது உலக சாதனையை முறியடித்தார்.
18 பந்துகளில் அரைச்சதம் கடந்த மெக்கலம் , 25 பந்துகளில் 77 ஓட்டங்களைப்பெற்ற வேளை வோக்ஸின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். இதில் 8 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் உள்ளடங்கும்.
கடந்த 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டியின்போது கனடாவுக்கு எதிராக, 24 பந்துகளில் மெக்கலம் அரைச்சதம் பெற்றமையே இதுவரை சாதனையாக இருந்தது.
நியூசிலாந்து அணி சார்பாக மெக்கலம் 77 ஓட்டங்களையும் குப்தில் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.இங்கிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் வோகஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.பந்துவீச்சில் மிரட்டிய ரிம்சௌத்தி இப் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.