Breaking News

6 மாதங்களில் ஸ்ரீலங்கா செய்யும் பணிகளை உன்னிப்பாக அவதானிப்போம் - ஐ.நா

ஸ்ரீலங்கா தொடர்பான விசாரணை அறிக்கை 6 மாதங்கள் வரை பிற்போடப்பட்டமை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் விளக்கமளித்துள்ளார்.

போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்ளக விசாரணை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.இந்த நிலையில் குறித்த உள்ளக விசாரணை எவ்வாறு அமையவுள்ளது என்பது தொடர்பாக உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாக பர்ஹான் ஹக் கூறியுள்ளார்.

உள்ளக விசாரணை என்ற பொறிமுறை எவ்வாறு அமையப்போகிறது என்பது மட்டுமன்றி, ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் ஏற்படுத்தப்போகும் விருத்திநிலை தொடர்பாகவும் கண்காணிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு சமூகங்களில் இருந்து பெறப்படும் விமர்சனங்களை ஐ.நா செயலாளர் நாயகம் கருத்திற் கொள்வதோடு, ஸ்ரீலங்காவின் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பார் என்பதையும் பர்ஹான் ஹக் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை பான் கீ மூன் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்தபோது குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு ஒத்துழைப்பு வழங்குவதையும் பான் கீ மூன் கூறியுள்ளதாக பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.