இலங்கை பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 4ம் திகதி
இலங்கையில் நாடாளுமன்றம் இந்த வாரம் கலைக்கப்பட்டால், வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக எதிர்க்கட்சியின் 114 நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, நிறைவேற்றப்பட்டால் உடனடியாக நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
எனவே நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகும்படியும், அவர் நேற்று முன்தினம் ஐதேக செயற்குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.மேலும், ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை இந்த வாரத்துக்குள் நடத்தும்படியும் அவர் சபாநாயகர் சமல் ராஜபக்சவிடம் கோரியிருக்கிறார்.
இந்தவாரம், நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, வாக்கெடுப்பில், 114 உறுப்பினர்களும் அதற்கு ஆதரவளித்தால், ஜோன் அமரதுங்க பதவியிழக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அவ்வாறு ஜோன் அமரதுங்க பதவியிழந்தால், உடனடியாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதால், இந்தவாரம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தவாரம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், வரும் ஏப்ரல் 4ம் நாள் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, ஐதேக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.