வலிகாமம் வடக்கு காணிகள் 3 கிழமைகளில் மீள கையளிக்கப்படும் - சுவாமிநாதன்
வலிகாமம் வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளில் ஆயிரம் ஏக்கரை நிலச்சொந்தக்காரர்களிடமே கையளிக்க 3 கிழமைகளில் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்.
வலிகாமம் வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
மீள்குடியேற்றம் குறித்து விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவில் யாழ் மாவட்ட அரச அதிபர் இராணுவ உயர் அதிகாரிகள் மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் விடுவிக்கும் காணிகள் குறித்தும் நிலச்சொந்தக்காரர்கள் குறித்தும் தகவலைத் திரட்டி காணியை அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் 3 கிழமைக்குள் (21நாட்களில்) முடிவுறுத்தப்படும் என்றார். எனினும் எந்த இடங்களை விடுப்பது என்று அமைச்சர் குறிப்பிடவில்லை. இதேவேளை வளலாய் குடியேற்றத் திட்டம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது அதை தாம் நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.