முல்லைத்தீவில் காணாமல் போன 17 பேரின் வழக்கு விரைவுபெறும்
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு வந்தபோது, இலங்கை அரசு பாதுகாப்பு உத்தரவாதத்தைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயிருப்பவர்களில் 17 பேர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணைகள் இனி துரிதப்படும் என்று இந்த வழக்கு தொடுத்திருப்பவர்களுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கிறிஸ்தவ மதகுரு ஒருவர் உட்பட 17 பேர் தொடர்பில் இவ்வாறான ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அது தொடர்பான விசாரணைகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் தெரிவித்தார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த பொன்னம்மா என்கிற மூதாட்டி தாக்கல் செய்துள்ள வழக்கில் தனது மருமகன், மகள், அவர்களின் இரண்டு குழந்தைகள் ஆகிய நான்குபேர் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும், அதன்பின்னர் அவர்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் தனக்குக் கிடைக்கவில்லை என்றும் நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தார்.
ஒரு ஆண்டுக்கும் மேலாக தாமதப்பட்டிருந்த இந்த வழக்கு விசாரணை நேற்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மனுதாரரின் கூற்றை உறுதிப்படுத்தி அவருடைய சகோதரியும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளதாக சட்டத்தரணி ரத்தினவேல் தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணைகளைக் கவனிப்பதற்கென அரச தரப்பில் நிரந்தரமாக, தமிழ் தெரிந்த ஒரு சட்டத்தரணி இப்போது நியமிக்கப்பட்டிருப்பதனால், வழக்கு விசாரணை நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்த ரத்தினவேல், இனிமேல் இந்த வழக்குகளின் விசாரணைகள் துரிதமாக நடைபெறும் என்று தாம் நம்புவதாகவும் கூறினார். இந்த வழக்கு அடுத்த மாதம் 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.