Breaking News

13+ அழுத்தங்களைக் கைவிட்டது இந்தியா

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தியா 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு காணும்படி வலியுறுத்தவில்லை என்று இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் அண்மையில் புதுடெல்லி சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி தலைமையிலான குழுவிடம், 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இந்தியப் பிரதமர் வலியுறுத்தினாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன,

அத்தகைய எந்த கோரிக்கையும் இந்தியாவினால் விடுக்கப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் கூட்டல் (பிளஸ்), கழித்தல் (மைனஸ்) என்று குழப்பினார். அவரது அந்தக் கணிப்புகள் தான் தோல்விக்கு இட்டுச் சென்றது.

இனப்பிரச்சினைக்கு எல்லா சமூகங்களும் ஏற்றுக் கொள்ளத் தக்க தீர்வு ஒன்றை எட்டுவதாக இந்தியாவிடம் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆக்கபூர்வமாகவும்  சாதகமாகவும் செயற்படும். ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை  என்று தெரிவித்துள்ளார்.