படை முகாம்கள் மீது கற்கள் வீசிய இராணுவ அதிகாரிகள் மீது விசாரணை
வடக்கில் சில இராணுவ முகாம்களின் மீது கற்களை வீசுமாறு ஒரு குழுவினரைத் தூண்டி விட்ட, இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக இலங்கைஅரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 9ம் நாள், அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதையடுத்தே, வடக்கிலுள்ள சில இராணுவ முகாம்கள் மீது கற்களை வீசுமாறு ஒரு குழுவினரைத் இந்த அதிகாரிகள் தூண்டியுள்ளனர்.
இந்த இரண்டு இராணுவ அதிகாரிகளும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள் என்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.இவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தேவையான ஆதாரங்கள் உள்ளதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு ஆம் என்று பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், மேலும் பலர் கைது செய்யப்படக் கூடும் என்றும் தெரிவித்தார்.
வரும் ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தும், சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த இராணுவ அதிகாரிகள் செயற்பட்டுள்ளனர்.நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக பாதுகாப்புப் படைகள் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய 400 பேருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு அறிக்கைகள் கிடைத்துள்ளன என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.