நாட்டை துண்டாடுவதே சர்வதேசத்தின் இலக்கு - ஞானசார தேரர்
நாட்டை துண்டாடுவதே சர்வதேசத்தின் இலக்கு என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டை பிரிப்பதற்காகவே பொது எதிரணி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே நாட்டை காப்பாற்றுவது அனைத்து மக்களதும் கடமையாகும். ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்ற வேறுபாடின்றி ஒன்றிணைய வேண்டும்.
மகிந்த ராஜபக்சவை வீழ்த்தி விடக்கூடாது. அவ்வாறான சூழ்நிலை உருவானால் மகிந்த ராஜபக்ச உட்பட அனைவரும் பருப்பு சாப்பிட வேண்டியேற்படும். பொது எதிரணியினர் நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு ஒரு பயங்கரவாத சூழ்நிலைக்கு கொண்டு செல்லவே திட்டமிட்டுள்ளனர்.
எனவே, மக்கள் தமது அரசியல் கட்சிகளையும் நிறங்களையும் மறந்து பாதுகாப்பான வளமான எதிர்காலத்துக்காக தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.மேற்கத்தேய தூதுவராலயங்கள் சிலவும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்தவை தோற்கடிக்க சதித்திட்டம் தீட்டி செயற்பட்டு வருகின்றன.
நாட்டை துண்டாட வேண்டுமென்பதே சர்வதேசத்தின் இலக்காகும். நாட்டின் தலைவரையும் குடும்பத்தையும் குடும்பத்தையும் அவரது பிள்ளைகளையும் மிக மோசமாக தூஷித்து தேர்தல் பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முச்சக்கரவண்டி தரிப்பிடங்களில் முச்சக்கரவண்டி சாரதிகள் சிலர் மூலம் கட்டுக்கதைகள் பரப்பப்பட்டு வருகின்றன. மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்க முடியாது என்பதனை உணர்ந்த இவர்கள் ஜனாதிபதியின் மீது சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.