இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: அவுஸ்ரேலியாவுக்கு குழப்பம்
இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை அவுஸ்ரேலிய அதிகாரிகள் கவனமாக, அவதானித்து வருவதாக, சிட்னி மோர்னிங் ஹெரால்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“ஆட்சி மாற்றத்தினால், அகதிகள் படகுகள் வருகையைத் தடுக்கும் கூட்டு நடவடிக்கை பாதிக்கப்படலாம் என்று அவுஸ்ரேலிய அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.
மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கும், கேள்விக்கிடமற்ற ஆதரவை கைவிடுமாறு, அவுஸ்ரேலியாவின் அபோட் அரசாங்கத்திடம், மனித உரிமை சட்டவாளர்கள், கோரியுள்ளனர்.உள்நாட்டுப் போரின் போது, இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து, அனைத்துலக விசாரணைக்கு அழுத்தம் கொடுக்குமாறும், அவர்கள், அவுஸ்ரேலிய அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
2009ம் ஆண்டு இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், அவுஸ்ரேலியா நோக்கிய ஆயிரக்கணக்கான தமிழ் அகதிகள் படையெடுக்கத் தொடங்கியதையடுத்து, அவுஸ்ரேலிய அரசாங்கம் சிறிலங்காவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டது.
அகதிகளின் வருகையைத் தடுப்பதற்காக, சிறிலங்காவுடன் இறுக்கமான உறவை பலப்படுத்திய அவுஸ்ரேலியா, கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால், போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக விசாரணைக் குழு அமைக்கப்பட்ட போதும், சிறிலங்காவின் பக்கத்திலேயே நின்றது.
அகதிகளின் படகுகளை தடுத்து நிறுத்துவதற்காக, அவுஸ்ரேலியா, போர்க்குற்றவாளிகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பை பேணுவதாக, ஜெனிவாவை தளமாக கொண்ட மனித உரிமைகளுக்கான அனைத்துலக சேவை அமைப்பைச் சேர்ந்த பில் லிஞ்ச் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சிறிலங்காவில் அதிபர் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்தப்பட்டால், மைத்திரிபால சிறிசேனவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக, பெங்களூரைச் சேர்ந்த சுதா இராமச்சந்திரன் என்ற தெற்காசிய அரசியல் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆய்வாளர் குறிப்பிட்டார்.
ஆனால், தேர்தல் முடிவை ராஜபக்ச ஏற்றுக் கொள்ளமாட்டார் என்ற கவலையும் உள்ளது.” என்றும் சிட்னி மோனிங் ஹெரால்ட் தெரிவித்துள்ளது.