ரணிலுக்கு ஒரு கோப்பை கோப்பி வழங்கினால் எல்லாம் சரியாகிவிடும் -மஹிந்த
அரசாங்கம் ஏதேனும் தவறிழைத்திருப்பின், அதற்கு அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற அனைத்து அமைச்சர்களும் பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
மினுவாங்கொடையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறினார்.தமது எதிர்கட்சித் தலைவர் பதவியை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் இம்முறை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படவில்லை என இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒரு கோப்பை கோப்பி வழங்கினால் எல்லாம் சரியாகிவிடும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.பத்து வருடங்களாக கடும் சர்வாதிகாரி ஒருவர் நாட்டை ஆட்சி செய்வதாக கூறுவதாயின், இந்த தவறுகளுக்கு மைத்ரிபால சிறிசேனவும் பொறுப்புக்கூற வேண்டும் அல்லவா என ஜனாதிபதி வினவினார்.
அதேபோன்று இந்த அரசாங்கம் தவறிழைத்திருந்தால், அதற்கு அமைச்சரவையில் உள்ளவர்களும் பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
தேவைக்கு அதிகமான நம்பிக்கையை அமைச்சர்கள் மீது வைத்திருந்தமை தவறென்பது தமக்கு தற்போது புலப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.