Breaking News

யுவன் ரகசிய திருமணம்!

இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவுக்கும் ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜபருன்னிசாவுக்கும் நேற்று இரவு ரகசியமாக திருமணம் நடைபெற்றுள்ளது.


பிரபல இசை அமைப்பாளர் இளைராஜாவின் மகன் யுவன் சங்கர்ராஜா 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு சுஜன்யா என்ற தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்ட யுவன் சங்கர் ராஜாவுக்கு திருமணவாழ்வில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2007 ஆம் ஆண்டு பிரிந்து 2 பேரும் விவாகரத்து பெற்றனர்.

அதன் பின்னர், ஷில்பா என்ற பெண்ணை காதலித்து 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வாழ்க்கையும் சரியாக அமையாததால் இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில், யுவன் சங்கர்ராஜாவுக்கு இஸ்லாமிய மதத்தின்மேல் ஏற்பட்ட ஈர்ப்பால் இஸ்லாம் மதத்துக்கு மாறி தனது பெயரை அப்துல்ஹாலிக் என்று மாற்றிக்கொண்டார். இஸ்லாமிய மதக்கோட்பாடுகளை பின்பற்றி 5 வேளை தொழுகை நடத்தி வரும் அவர், கீழக்கரையை சொந்த ஊராக கொண்டு மலேசியாவில் வசித்து வரும் ஜபருன்னிசாவை காதலித்தார்.

ஜபருன்னிசா துபாயில் ஆடை வடிவமைப்பாளராக உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி சென்னையில் நடந்தது. திருமண நிச்சயதார்த்தத்தில் இளையராஜா குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், துபாயில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்ததாக கூறப்பட்ட யுவனின் திருமணம் திடீரென்று மாற்றப்பட்டு கீழக்கரையில் நேற்று இரவு (ஜனவரி 1 ஆம் தேதி) ரகசியமாக நடந்துள்ளது. இதற்காக, கடந்த ஒருவாரத்துக்கு முன்பே கீழக்கரைக்கு வந்து தங்கியிருந்த அப்துல்ஹாலிக்கானுக்கும், ஜபருன்னிசாவுக்கும் நேற்று இரவு கீழக்கரை மேலத்தெருவில் உள்ள புதிய பள்ளிவாசல் பின்புறம் உள்ள தோட்டம் ஒன்றில் ரகசிய திருமணம் நடந்துள்ளது. 

இந்த திருமணத்தில் யுவனின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் மணப்பெண் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். பலத்த பாதுகாப்புடன் யாரும் நுழைந்துவிடாதபடி நடந்த இந்த திருமணத்தில், இளையராஜா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை.