Breaking News

தாவல்களின்றி முடிந்தது மைத்திரியின் இறுதி பிரச்சாரக் கூட்டம்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின் இறுதிநாளான நேற்று, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் இறுதிப் பரப்புரைக் கூட்டத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது போன்று எந்த கட்சித் தாவல்களும் இடம்பெறவில்லை.


நேற்று நள்ளிரவுடன் தேர்தல் பரப்புரைகள் முடிவுக்கு வரவிருந்த நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் இறுதிப் பரப்புரைக் கூட்டம் நேற்றிரவு மருதானையில் இடம்பெற்றது.

இந்த இறுதிப் பரப்புரை மேடையில், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசதரப்பில் இருந்து பலர் கட்சி தாவலாம் என்று ஊகங்கள் வெளியாகியிருந்தன.எனினும், அரசதரப்பில் இருந்து எவரும் நேற்றிரவு எதிரணியின் மேடையில் இணைந்து கொள்ளவில்லை.

அதேவேளை, இறுதிப் பரப்புரைக் கூட்ட மேடைக்கு மைத்திரிபால சிறிசேன தாமதமாகவே – இரவு 11.30 மணியளவில் வந்து சேர்ந்தார்.மொரட்டுவவில் நடந்த மற்றொரு பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றி விட்டே, அவர் மருதானைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதனால், அவர் இறுதிப் பரப்புரைக் கூட்டத்தில் குறுகிய நேரமே உரையாற்ற முடிந்தது.நள்ளிரவுக்கு முன்னதாக, பரப்புரைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்பதால், 12 மணிக்கு 3 நிமிடங்கள் இருந்த போது- 11.57 மணியளவில் அவர் தனது  உரையை முடித்துக்  கொண்டார்.

மைத்திரிபால தனது உரையில், அதிபராகத் தாம் தெரிவு செய்யப்படுவேன் என்று உறுதியாக எடுத்துக் கூறியிருந்தார்.