தேர்தலில் அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும்-கனேடியத் தமிழர் பேரவை
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் அனைத்துத் தமிழர்களும் வாக்களிக்கும் தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்த வேண்டும். என கனேடியத் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன் துல்லியமானதும் பொருள் பொதிந்ததுமான வாக்களிப்பு முறையை ஊக்குவிப்பதற்கு சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தலை உறுதிப்படுத்துமாறு சர்வதேச கண்காணிப்பு அமைப்புகளையும் கனேடிய தமிழர் பேரவை கேட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் குறித்து கனேடியத் தமிழர் பேரவையின் தலைவர் பூபாலபிள்ளை விடுத்த அறிக்கையிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் வருமாறு:
நடைபெறவிருக்கும் தேர்தலில் பதவியில் இருக்கும் ஒருவர் முதல் முறையாக மூன்றாவது தடவையும் போட்டியிடுகிறார். கொழும்பு 'டெய்லி மிரர்' நாளேட்டுக்குச் செவ்வியளித்த மாற்றுக் கொள்கைகளுக்கான நடுவத்தின் நிறைவேற்று இயக்குநரான பாக்கியசோதி சரவணமுத்து வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்கள் வாக்களிப்பதைத் தடுக்கும் வண்ணம் இராணுவத்தைப் பயன்படுத்தக் கூடாதென எச்சரிக்கை செய்துள்ளார்.
“கடந்த சில நாட்களாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன், மனோ கணேசன் மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அடிகளார் உட்பட இலங்கையின் தமிழ்த் தலைவர்கள் தங்களது முயற்சிகளைப் பலப்படுத்தும் வண்ணம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வாக்களிக்க வேண்டும் என வற்புறுத்திக் கேட்டுள்ளார்கள்" வட இலங்கைக்குப் பயணம் செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தேர்தலைக் கண்காணிப்பதற்கு செல்லும் வெளிநாட்டு பார்வையாளர்கள் அனுமதி பெறவேண்டும் என்ற தேவைபற்றிக் கனேடியத் தமிழர் பேரவை கவலை கொண்டுள்ளது.
அண்மையில் வடக்கில் நடைபெறும் தேர்தலைக் கண்காணிக்கப் சர்வதேச கண்காணிப்பாளர்கள் மீது பாதுகாப்பு அமைச்சால் திணிக்கப்பட்டுள்ள தடைகள் நேர்மையான தேர்தல் நடைபெறுவதை தடுக்கும் உத்தி எனத் கனேடியத் தமிழர் பேரவை நம்புகிறது. “நடைபெறும் தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை வற்புறுத்த நாங்கள் விரும்புகிறோம்" எனவே வரும் 8 ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் மக்கள் திரளாகச் சென்று வக்களிக்குமாறு இலங்கையில் வாழும் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளுமாறு தமிழ்க் கனேடியர்களைக் கனேடியத் தமிழர் பேரவை அன்போடு கேட்டுக் கொள்கிறது.