கேபி.யை கைது செய்வதா? சட்டமா அதிபரிடம் நீதிமன்றம் ஆலோசனை
கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து கருத்து முன்வைக்குமாறு சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கேபி எனப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்யுமாறு ஜேவிபி தாக்கல் செய்துள்ள மனு மேன்முறையீட்டு நீதிமன்ற இரண்டு நீதியரசர்கள் கொண்ட குழு முன் இன்று (27) பரிசீலிக்கப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் மற்றும் விஜித் மல்லகொட ஆகிய நீதிபதிகள் மனுவை விசாரித்து மேற்கண்ட அறிவித்தலை விடுத்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சர்வதேச ஆயுதக் கொள்வனவாளர் மற்றும் சர்வதேச நிதி சேகரிப்பாளர் என கருதப்படும் கேபி.யை கைது செய்து நீதின்றில் முன்னிலைப்படுத்துமாறு ஜே.பி.பி கடந்த 19த் திகதி மனு தாக்கல் செய்துள்ளது.
ஜேவிபி பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்ததோடு மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், இராணுவத் தளபதி மற்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். கேபி மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட நிலையில் தற்போது கிளிநொச்சியில் சிறுவர் இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார்.