மேலும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை இழக்கிறார் மகிந்த
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து மேலும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று விலகிக் கொள்ளவுள்ளதாக, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர், இந்த தகவலை வெளியிட்டார்.ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேலும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக, அவர் அறிவித்தார்.எனினும், இன்று கட்சி தாவவுள்ள அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அவர் வெளியிடவில்லை.
இதற்கிடையே, நேற்று அமைச்சர்களின் செயலர்கள் மற்றும் இணைப்புச் செயலர்கள் 17 பேர் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.திம்பிரிகஸயாயவில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இவர்கள் தமது முடிவை அறிவித்தனர்.
அமைச்சர்களான, வீரகுமார திசநாயக்க, ஏ.எச்.எம்.பௌசி, குணரத்ன வீரக்கோன், சுசந்த புஞ்சிநிலமே, மகிந்த அமரவீர, அனுரபிரியதர்சன யாப்பா, ரத்னசிறி விக்கிரமநாயக்க, மற்றும் முன்னாள் அமைச்சர்களான துமிந்த திசநாயக்க, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, ஆகியோரின் செயலர்கள் மற்றும் இணைப்புச்செயலர்களே கட்சிதாவியுள்ளனர்.
அதேவேளை, உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் தொடர்ந்தும், எதிரணியின் பக்கம் சாய்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.