எமக்கு ஒரு ஜனநாயக சூழல் வேண்டும்-தம்பிராசா
எமக்கு ஒரு ஜனநாயக சூழல் வேண்டும் என்பதற்காகவே மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிக்கின்றோம். என அடக்கு முறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.இன்று ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.
ஈழ மக்கள் மற்றும் உலக மக்கள் விருப்பப்படியே இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சும்பந்தன் மைத்திரிபாலவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்திருக்கின்றார்.இந்த சரியான முடிவை கூட்டமைப்பு எடுக்காமல் விட்டிருந்தால் தமிழ்த் தேசியத்தின் வறுமையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும்.அதேவேளை நேற்றைய தினம் முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் மிக விளக்கமாக மைத்திரிக்கு வாக்களிக்குமாறு மிகத்திடமாகக் கூறியிருக்கின்றார்.
அண்மையில் அரச தொலைக்காட்சி ஒன்றில் விவாத நிகழ்வுக்கு கலந்து கொண்ட கீதாஞ்சலி கூறியிருந்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இறந்த உயிர்களைத்தவிர வேறு எது வென்றாலும் தருவார் என்று. நான் அவருக்கு அப்போது கோரினேன். இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களையும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களையும் சிறைச்சாலையில் உள்ள அரசியல் தலைவர்களையும் அவர்களது குடும்பங்களில் ஒப்படைப்பீர்களா? அதுமட்டுமல்லாது வடபகுதியில் இராணுவம் சுவீகரித்திருக்கும் காணிகளையும் சட்டவிரோத சிங்கள குடியேற்றங்களையும் அகற்றுவீர்களா என்று அதற்கு ஒரு பதிலும் அவர் வழங்கவில்லை.
ஜேவிபியின் கிளர்ச்சியின் போது கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்திருக்கின்றீர்கள் ஆனால் விடுதலைப்புலிகளின் யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கழிந்தும் இன்னும் ஏன் அவர்களை விடுதலை செய்யவில்லை.மகிந்தவின் ஆட்சியில்தான் தமிழ் மக்கள் பல சொல்லன்னா துன்பங்களை அனுபவித்திருக்கின்றது.இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது அதனை அனைத்து தமிழ் பேசும் மக்களும் தீர்த்து வைக்க வேண்டும்.
அத்தோடு இலங்கையில் தமிழ் இனம் ஒரு தனிப்பட்ட இனமாகவே வாழ்ந்து வருகின்றது. இதனால்தான் இந்த இடத்தில் நான் கறுப்பு பட்டியணிந்தும் கறுப்பு சேட்டு அணிந்தும் வந்திருக்கின்றேன் காரணம் எமது மக்கள் பட்ட துன்பங்களை வெளி உலகிற்கு காட்ட வேண்டும் என்பதற்கே ஆகவே இந்த மகிந்தவின் பத்து வருட ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து கூட்டமைப்பின் முடிவிற்கு ஏற்ப அனைவரும் மைத்திரிக்கு வாக்களித்து ஒரு ஜனநாயக நாட்டை உருவாக்குவோம் என அவர் தெரிவித்துள்ளார்.