உணர்வுபூர்வமாக நடைபெற்ற கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு தினம் (படங்கள் இணைப்பு)
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 28ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று புதன்கிழமை மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) தமிழரசுக் கட்சி கிளை ஏற்பாட்டில் கொக்கட்டிச் சோலையில் நடைபெற்றது.
கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் "கொக்கட்டிச்சோலை படுகொலையின் 28ஆவது ஆண்டு வணக்க நிகழ்வும் சமகால அரசியல்" கருத்தரங்கும் என்னும் தலைப்பில் நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா, மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களினால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டது.
1989ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இரால் பண்ணையில் வேலையில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.இந்த கொலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப்பரராஜசிங்கம் ஐ.நா.வின் கவனத்துக்கு கொண்டு சென்றதை தொடர்ந்து படுகொலை சம்பவம் சர்வதேச மயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.