Breaking News

தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க நான் தயார் - மகிந்த

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணிக்கு ஆதரவளித்தாலும் தமிழ் மக்கள் எதிரணியினை ஆதரிக்க மாட்டார்கள்  என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  


கொழும்பை மையமாக கொண்டு இயங்கும் ஞாயிறு வார இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,   தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிரணிப்பக்கம் சென்று விட்டதால் மக்களும் அந்தப் பக்கமே சென்றுவிடுவார்கள்  என நினைத்துக் கொண்டே கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.   

ஆனால்  'வடக்கில் எங்களுக்கும் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள்' கூட்டமைப்பு எதிரணிக்கு ஆதரவளித்தாலும் மக்கள்  ஆதரிக்க மாட்டார்கள்.  இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.  ஆனால் அதனைப் பெற்றுக் கொள்வதற்கான யோசனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடையாது.   

அமெரிக்கா, இந்தியா,ஜெனீவா மூலம் தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு நினைக்கின்றது.    தீர்வு வழங்கப்பட்டு விட்டால் கூட்டமைப்பினால் அரசியல் செய்ய முடியாது . அதனால் தான் தீர்வு விடயத்தில் அவர்கள் ஆர்வமின்றி செயற்படுகின்றனர்.   

தங்களுடைய அரசியல் தேவைக்காக தீர்வைக்கானாது பிச்சைக்காரன் புண்போல வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.    நாளைக்கே வேண்டும் என்றாலும் எம்மால் தீர்வு தரமுடியும் ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்  அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.   வடக்கில் அபிவிருத்திகளை மேற்கொண்டு வந்தாலும் அங்கு நாம் இன்னமும் அரசியலில் இறங்கவில்லை.அரசியலும் செய்யவில்லை.  

 வடக்கு மாகாண சபையில் எமது பிரதிநிதியான அங்கஜன் இராமநாதன் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில் கடந்த முறைகளை விட இம்முறை கணிசமான வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன் என்றார்.