Breaking News

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு வடமாகாண சபை ஜனாதிபதிக்கு கடிதம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு மைத்திரிபால சிறிசேனவுக்கு வடமாகாண சபை கடிதம் அனுப்பியுள்ளது.

மாகாண சபையின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்களால் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.“1979ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ரத்துச் செய்தல்” எனத் தலைப்பிட்டு அனுப்ப்பட்ட கடிதத்தின் முழு விவரம்.

2014 ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெற்ற வடக்கு மாகாண சபையின் அமர்வில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் கீழே தரப்படுகிறது.

இலங்கை மக்களின் சமாதானமான வாழ்வை உறுதிப்படுத்தும் பொருட்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சகல அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளையும் மேதகு ஜனாதிபதியையும் இச்சபை கோருகிறது.இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் போது சபை பின்வரும் விடயங்களைக் கவனத்தில் கொண்டது.

1) இந்தச் சட்டம் அப்பாவிப் பொதுமக்களை விசாரணை எதுவுமின்றி தன்னிச்சையாகக் கைதுசெய்து தடுத்து வைக்க பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதிகாரமளிக்கிறது. மேலும் பொய்க் குற்றச்சாட்டுக்களை புனைந்து அப்பாவிப் பொது மக்களை காலவரையறையின்றி தடுத்து வைக்க வாய்ப்பளிப்பதுடன் ஊழல் முறைக்கேட்டுக்கும் வழி வகுத்துள்ளது.

2) பொலிஸாரால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி எவரையும் பயங்கரவாதச் சட்டத்தில் சிக்க வைக்கவும், பிணை வழங்குவதை மட்டுப்படுத்தவும் இந்தச் சட்டம் வழிவகுத்துள்ளது.

3) தடுத்து வைக்கப்படும் காலத்தில் எவரையும் துன்புறுத்தவும், கட்டாய வாக்குமூலங்களைப் பெறவும் அதிகாரிகளால் முடிகிறது.

4) பொதுவாக இந்தச் சட்டம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை முழுமையாக மீறுகின்றது.

5) இந்தச் சட்ட ஏற்பாடுகள் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற வேறுபாடின்றியும், வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கைச் சேர்ந்தவர்கள் என்ற வேறுபாடின்றியும் சகல மக்களது கருத்துத் தெரிவிக்கும் உரிமைகளை நசுக்கவும் உபயோகப்பட்டுள்ளது.

எனவே 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இந்தச் சட்டத்தை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தங்களை வேண்டுகின்றோம் என்றுள்ளது.