ஐ.நா அறிக்கையினை பிற்போட்டால் அது தமிழர் பிரச்சினையை மலினப்படுத்தும் - சுரேஸ்
இலங்கையில் ஆட்சிமாற்றம் ஒன்று உருவாகியிருப்பதனை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வு அறிக்கை வெளியிடுவதனை பிற்போடுவதற்கு முயற்சிக்கப்பட்டால் அது தமிழர்களின் பிரச்சினைகளை அடியோடு மலினப்படுத்துவதாகவே அமையும் என பா.உ சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கூட்டமைப்பின் நீர்வேலி அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,
மஹிந்த அரசாங்கம் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவினை நிராகரித்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போதைய அரசாங்கமும் நாம் ரோம் உடன்படிக்கையில் கையொப்பமிடவில்லை என கூறியிருக்கின்றார்கள்.எனவே தாங்களும் ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்பதாகவே அவர்களுடைய கருத்துக்கள் இருக்கின்றன.
மேலும் தாங்கள் இலங்கைக்குள் ஒரு உள்ளக விசாரணையினை நடத்தப் போவதாக கூறியிருக்கின்றார்கள். ஆனால் உள்ளக விசாரணைகளில் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நம்பிக்கை உண்டாகாது. இது எங்கள் கடந்தகால அனுபவத்தின் பாடமாக இருக்கின்றது. கடந்த காலத்தில் பல விசாரணைகள் நடத்தப்பட்டபோதும் அவற்றினால் பயன் எதுவுமில்லை.
குறித்த ஐ.நா விசாரணையினை கொண்டு வருவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் அதிகளவான முயற்சியினை மேற்கொண்டிருக்கின்றார்கள்.எனவே நாம் கூறுவது ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் மூலமாகவே இலங்கையில் எதற்காக யுத்தம் நடைபெற்றது. எதற்காக மக்கள் கொல்லப்பட்டார்கள்? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். நாம் நம்புகின்றோம். அவ்வாறான ஒன்றின் மூலமாகவே தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு ஒன்றினை நாங்கள் அடைந்து கொள்ள முடியும்.
எனவே கடந்த காலத்தில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய நேச நாடுகள் இந்த விடயத்திலும் எமக்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய, ஐ.நா விசாரணைக் குழுவின் அறிக்கையினை உரிய காலத்திற்கு வெளியிடுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மீள்குடியேற்றம் தொடர்பாக,
வடகிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம் தொடர்பில் புதிய ஆட்சியாளர்கள் திடமான ஒரு தீர்வினை வைத்திருந்தார்களேயானால் மீள்குடியேற்றம் சாத்தியமான விடயமாகும்.குறிப்பாக வலி, வடக்கில் 58 சதுர கிலோமீற்றர் நிலத்தில் 32சதுர கிலோமீற்றர் நிலம் விடுவிக்கப்பட்டிருக்கின்றது. எனவே விடுவிக்கப்படாத 26சதுர கிலோமீற்றர் நிலத்தில், 10சதுர கிலோமீற்றர் நிலம் வெறும் பற்றைகளாக உள்ளது.
மேலும் படைமுகாம் போக மிகப்பெருமளவு நிலத்தில் படையினர் விவசாயம் மற்றும் கால்நடைகளை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.எனவே அந்த நிலங்களை முதற்கட்டமாக விடுவிக்க முடியும். மேலும் சம்பூர் பகுதியை எடுத்துக் கொண்டால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவியின் சொந்தக்காரார், ஒருவருக்கு அங்கே நிலம் வழங்கப்பட்டது.
அவர் அங்கிருந்த கோவில்கள், பாடசாலைகள், வீடுகள் ஆகியவற்றை அடியோடு அழித்தார். ஆனால் அவர் அங்கே பொருளாதார வலயம் ஒன்றை அமைக்கப் போவதாகவே கூறினார். ஆனால் இன்றுவரையில் அவ்வாறான ஒன்றை அவர் உருவாக்கவில்லை. எனவே திடமாக அரசிடம் மீள்குடியேற்றம் தொடர்பில், ஒரு கொள்கை இருக்குமானால் மீள்குடியேற்றம் என்பது சாத்தியமான ஒரு விடயமாகவே இருக்கும் என்றார்.