Breaking News

மக்களை வாக்களிக்குமாறு கேட்க முடியாது - அனந்தி

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபாலவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தமைக்காக, தான் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிகரன் தெரிவித்துள்ளார். 


யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

இறுதி யுத்தத்தின் போது, பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சராக மைத்திரி இருந்துள்ளார். அப்போது, முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தமிழ் மக்களை கொல்லும் போது எந்த கருத்துக்களையும் கூறவில்லை. 

அந்த அடிப்படையில், மக்களிடம் சென்று இவருக்கு வாக்களிக்குமாறு கேட்க முடியாது. அத்துடன், யுத்தம் நிறைவடைந்த பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், சரத் பொன்சேகா தோல்வியடைந்தார் என அனந்தி கூறினார். 

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் இந்த செயற்பாட்டினை தாம் முற்றாக நிராகரிப்பதுடன், இந்த தேர்தலிற்கு மக்களை வாக்களிக்குமாறு கேட்க முடியாதென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.