Breaking News

மன்னார் ஆயரிடம் மகிந்த மன்னிப்புக்கோரினார்

இலங்கை அரசாங்க வானொலியில் செய்யப்பட்ட தரக்குறைவான பரப்புரைக்காக, மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகையிடம், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மன்னிப்புக் கோரியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன், முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன், மன்னார் ஆயரை சந்தித்து ஆசி பெற்றதையடுத்து, இலங்கை அரச வானொலியில், ஆயர் இராயப்பு யோசெப்புக்கு எதிராக தரக்குறைவான விமர்சனங்கள் வெளியிடப்பட்டன.

இந்தநிலையில், கடந்தவாரம் தேர்தல் பரப்புரைக்காக வடக்கிற்குச் சென்ற மகிந்த, மடு தேவாலயத்துக்கும் சென்று மன்னார் ஆயரை சந்தித்தார்.அதற்கு முதல் நாள், மகிந்த ராஜபக்ச, மன்னார் ஆயரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அரச வானொலியில் ஒலிபரப்பான தரக்குறைவான விமர்சனங்களுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார்.

அதற்கு முன்னதாக, அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவும், ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னான்டோ புள்ளேயும், அரச வானொலியில் செய்யப்பட்ட விமர்சனங்களுக்காக மன்னார் ஆயரிடம் தொலைபேசி மூலம் மன்னிப்புக் கோரியிருந்தனர் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.