நெடுந்தீவை பீடித்திருந்த சனிபகவான் தற்போது நீங்கியுள்ளாராம்!(காணொளி)
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் தலமையிலான குழு இன்றைய தினம் விஜயம் செய்துள்ளனர். இந்நிலையில் மக்கள் வீதிகளில் கும்பங்கள் வைத்து வெடிகொழுத்தி ஆர்ப்பரித்தபடி முதலமைச்சர் தலைமையிலான குழுவை வரவேற்றுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தின் ஏற்பாட்டிலேயே இக்குழுவினர் நெடுந்தீவுக்கு விஜயம் செய்துள்ளனர்.
வடமாகாணத்திலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களின் தேவைகளை அறிந்து கொள்வதற்காக முதலமைச்சர் வகுத்துக் கொண்ட திட்டத்தின்படி இன்றைய தினம் தொடக்கமாக நெடுந்தீவுக்கு மேற்படி குழு சென்றிருந்தது.
இதில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், இவர்களுடன் வடமாகாண சபை உறுப்பினர்களான திருமதி அனந்தி சசிதரன், பா.கஜதீபன், கே.சயந்தன், ஆனோல்ட் ஆகியோரும் பிரதேச சபை உறுப்பினர்களும் கட்சியினர் ஆதரவாளர்களும் சென்றிருந்தனர்.
இதன்போது மக்கள் நெடுந்தீவு இறங்கு துறையில் மிகப்பெரும் வரவேற்பினை வழங்கியதுடன், பெருமளவு மக்கள் வீதியில் கூடி சகல வீடுகள் மற்றும் கடைகளில், கும்பங்களை வைத்து முதலமைச்சர் தலமையிலான குழுவிற்கு மலர் மாலைகளை அணிந்து வர வேற்பினை வழங்கினர்.
மேலும் வீதி முழுவதும் வெடியோசைகளால் அதிரும் வகையில் வெடிகளும் கொடுத்தப்பட்டன.
இந்நிலையில் இன்றைய விஜயத்தில் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில்
பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்ட முதலமைச்சர் குழுவினர், பின்னர் வழிபாட்டுத் தலங்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்று நெடுந்தீவின் அபிவிருத்தி தொடர்பிலான ஆய்வினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது நெடுந்தீவு மக்கள் குடிதண்ணீர், வீதி, படகுப் போக்குவரத்து, மற்றும் உள்ளக போக்குவரத்து, வேலைவாய்ப்பு மற்றும் ஈ.பி.டி.பியின் அக்கிரமங்களிலிருந்து விடுதலை வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.
குறித்த விஜயம் இன்றைய தினம் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரையில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.