வடக்கிலிருந்து படையினரை அகற்ற முடியாது - மைத்திரி
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் வடக்கிலிருந்து படையினரை அகற்றும் எண்ணம் எதுவும் தனக்கு இல்லையென பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வியாழக்கிழமை தான் வெற்றிபெற்றால் நாட்டின் பாதுகாப்பு தனது பொறுப்பிலேயே இருக்கும் என மைத்திரி குறிப்பிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பே எனது முன்னுரிமைக்குரிய விடயமாக காணப்படும்.
நாட்டை பிளவுபடவோ அல்லது விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்கவோ அனுமதிக்க மாட்டேன். அதிகாரத்தை பகிர்வது தொடர்பாக சிறுபான்மை கட்சிகளுடன் உடன்படிக்கை எதிலும் நான் கைச்சாத்திடவில்லை. என்னை ஆதரிக்கும் கட்சிகள் 100 நாள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையிலேயே எனக்கு ஆதரவு வழங்க முன்வந்தன.
பௌத்த மதத்திற்கு முன்னுரிமையளிக்கும் அதேவேளை நாட்டின் ஏனைய மதங்களுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்படும்.- என அவர் தெரிவித்துள்ளார்.