Breaking News

புதிய ஆண்டில் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் - கூட்டமைப்பு

புதிய வருடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.   


இலங்கையின் தற்போதைய ஆட்சி மோசமடைந்து வருகின்றது. எனவே, இந்த நிலைமையில் கட்டாயம் ஒரு மாற்றம் ஏற்படவேண்டும். இது இந்த நாட்டில் வாழும் மூவின மக்களின் விருப்பமாக உள்ளது.      விசேடமாக நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினை நீண்டகாலமாகத் தொடர்கின்றது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.

 எனவே, தமிழரின் பிரச்சினைக்கு 2015 இல் கெளரவமான - நிரந்தரமான தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மக்களும் நாமும் இருக்கின்றோம்.    எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து மக்களும் ஆட்சி மாற்றத்திற்கு ஏற்றவகையில் தமது வாக்குகளைப் பயன்படுத்தவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.     

தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகள் என்ற வகையில் அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யவேண்டிய பொறுப்பு எமக்குண்டு. இதற்கேற்ப நாம் செயற்பட்டு வருகின்றோம்.    கடந்த காலங்களில் தீர்வு விடயம் தொடர்பில் நாம் எடுத்த முயற்சிகள் துரதிஷ்டவசமாகக் கைகூடவில்லை.  எனினும், இந்த முயற்சிகள் தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   

எனினும் 2015 புதுவருடத்திலாவது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.  நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பதையும், அதற்கான காரணங்கள் என்ன என்பதையும் விளக்கி நாம் கொழும்பில் நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அறிக்கை ஒன்றை மூன்று மொழிகளில் வெளியிட்டுள்ளோம்.   இதனை அனைத்து மக்களும் ஊடகங்கள் வாயிலாக வாசித்து - கேட்டு இருப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.