ஜனநாயக ஆயுதத்தை முழுமையாக பயன்படுத்தவும் - சிறீதரன்
எதிர்வரும் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஜனநாயக ஆயுதமான வாக்கை முழுமையாக பயன்படுத்த வேண்டுமென பா.உறுப்பினர் சி.சிறீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்துள்ள நிலைபாட்டின்படி தமிழ்மக்கள் மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டியது வரலாற்றுக் கடமையாகின்றது.
வாக்கு என்பது மிக முக்கியமான ஜனநாயக கடமைக்குரிய ஆயுதம். எனவே தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் நாளன்று காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிப்பது அவசியம்.அப்படி வாக்களிக்க தவறுகின்ற சந்தர்ப்பத்திலும் வாக்களிக்க போகாமல் கவலையீனமாக இருக்கின்ற நிலையிலும் அந்த வாக்குகளை மோசடியாளர்கள் பயன்படுத்தக்கூடிய அபாய நிலை உண்டு.
இதன் மூலம் தமிழர்கள் நினைக்கின்ற முடிவில் பின்னடைவுகளும் ஏற்படலாம்.அன்புக்குரிய மக்களே! நீங்கள் உங்கள் வீடுகளில் உள்ள எல்லாவாக்குகளையும் இத்தேர்தலில் முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
உங்கள் அயலவர்களையும் வாக்களிக்கும் நாளில் ஊக்குவித்து உசாரடைய செய்ய வேண்டும்.இதன் மூலம் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றத்திற்கான வாக்களிப்பு முழுமையான வெற்றிபெறும். சில தமக்கு வாக்குச்சீட்டுக்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
எனவே வாக்கு சீட்டு இன்னும் கிடைக்காதவர்கள் அருகிலுள்ள அஞ்சல் நிலையங்களை தொடர்பு கொண்டு இது தொடர்பான தெளிவை பெறவேண்டியது அவசியமாகின்றது.வாக்குச்சீட்டுக் கிடைக்காதவர்கள் தகவல்கள் தரவிரும்பினால் கீழ் தமது இலக்கத்துடனும் தொடர்புகொள்ளுமாறு பா.உறுப்பினர் சி.சிறீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொலைபேசி இல. 0213207584