குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் மகிந்த
இலங்கையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தாம் தோல்வியடைந்த பின்னர், தமக்கு எதிராகவும், தமது குடும்பத்தினருக்கு எதிராகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்லில் தோல்வியடைந்த பின்னர் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற முயன்றதாக என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லை.அது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு.
அதுபோன்று தேர்தலுக்கு பின்னர் எனது குடும்பத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் பொய்யான பிரசாரங்களும் ஆதாரங்களற்றவை.
அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த போதே, நான் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தி அலரி மாளிகையிலிருந்து வெளியேறினேன்.
இந்த நிலையில் நான் சட்டவிரோதமாக அதிகாரத்தை வைத்துக் கொள்வதற்கு அரசாங்கத்துக்கு சட்ட ஆலோசனை வழங்கும் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற முயன்றதாகக் கூறும் கூற்று ஒன்றுக்கொன்று முரணானது.
மிகவும் அருவருக்கத்தக்க குற்றச்சாட்டு என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.இது தொடர்பாக புதிய அதிபர் ஜனாதிபதி பொலன்னறுவையில் ஆற்றிய உரையைக் கேட்டு நான் மிகுந்த வேதனையடைந்தேன்.பதவியிலிருந்து விலகிய பின்னரும் என்னால் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்கக் கூடிய சூழ்நிலை இல்லை.
தொலைக்காட்சி பொருத்தப்பட்ட, குளிரூட்டப்பட்ட கழிப்பறை உள்ளிட்ட அலரி மாளிகையின் சில பகுதிகளை தொலைக்காட்சிகளில் காண்பித்து நானும், எனது குடும்பத்தினரும் அரச செலவில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்ததாக மக்களை ஏமாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வசதிகள் அனைத்தும் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டுக்காக அரச தலைவர்கள் மற்றும் பிற நாட்டு பிரதிநிதிகளின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டவை.
அத்துடன் எனது மனைவி திறைசேரியில் இருந்து 100 கிலோ தங்கத்தை விற்பனை செய்ய முயன்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு கேலி கூத்தானது.
திறைசேரியில் உள்ள தங்கத்தை அதன் செயலர் நினைத்தால் கூட இரகசியமாக விற்பனை செய்ய முடியாதுஎனது படத்துடன் தயாரிக்கப்பட்ட கடிகாரங்கள், தேநீர் கோப்பைகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.எனது தலைமையிலான அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோதே நாட்டில் பெரியளவில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன,
அவையும் முறையான சட்டவழிமுறைகளுக்கு அமையவே செயற்படுத்தப்பட்டன.எனவே என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் மக்களது கவனத்தை திசை திருப்பும் நோக்குடன் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது என அவர் தெரிவித்துள்ளார்.