அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரம் – புதுடெல்லியில் பேச்சு
தமிழ்நாடு அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், இலங்கைத் தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக இந்திய- இலங்கை அரசாங்கங்களுக்கு இடையிலான பேச்சுக்கள் நேற்று புதுடெல்லியில் நடைபெற்றுள்ளன.
ஜவஹர்லால் நேரு பவனில் நேற்று நடந்த இந்தப் பேச்சுக்களுக்கு, இந்திய அரசாங்கத்தின் தரப்பில், இந்திய வெளிவிவகார அமைச்சில் இலங்கை – மாலைதீவு விவகாரங்களுக்கான, மேலதிகச் செயலரான சுசித்ரா துரை தலைமையிலான அதிகாரிகளும், இலங்கை தரப்பில், புதுடெல்லியில் உள்ள இலங்கை தூதரக உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்தப் பேச்சுக்களில் தமிழ்நாடு அரசாங்கத்தின் பிரதிநிதி ஒருவரை அனுப்பும்படி, இந்திய வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்திருந்தது.
எனினும், தமிழ்நாடு அரசின் சார்பில் இந்தப் பேச்சுக்களில் எவரும் பங்கேற்கவில்லை.
சிறிலங்காவில் தமிழர்கள் மீளக்குடியேறுவதற்கான சூழல் இன்னமும் ஏற்படவில்லை என்பதால், அகதிகளை திருப்பி அனுப்பும் திட்டத்தை கைவிடுமாறு தமிழ்நாடு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டிருந்தார்.இதனால், புதுடெல்லிக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு புறக்கணித்திருந்தது.
அதேவேளை, நேற்று நடந்த கூட்டத்தில், அகதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பான பல்வேறு செயற்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.மேலும், இந்தியாவில் தங்கியுள்ள அகதிகள் பற்றிய தரவுகள் சிறிலங்கா அரசாங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை, அகதிகளைப் பலவந்தமாக திருப்பி அனுப்புவதில்லை என்றும், சுயவிருப்பின் அடிப்படையிலேயே இந்த திருப்பி அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இந்திய அரசாங்கத்தின் சார்பில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பேச்சுக்களை அடுத்து, இந்திய அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சுக்களுடனான கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன.
எனினும், அடுத்தமாதம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கொழும்பு வரும் போதும், மார்ச் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு செல்லும் போதும், அகதிகளைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கை குறித்து மேலதிக பேச்சுக்கள் இடம்பெறும் என்று தெரியவருகிறது.