அடுத்த தேர்தலை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் - சுரேஷ்
அடுத்த தேர்தலை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமாகவே இருக்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுபினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
எரிவாயு, பெற்றோலியப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. ஆகவே சாதாரண மக்களுக்கு மகிழ்ச்சியைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய வரவு செலவுத்திட்டம். முன்னைய அரசுகள் மக்கள் மீது சுமத்திய வரிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வகையில் இந்த வரவுசெலவு த்திட்டத்தை நோக்கும்போது மக்களுக்கான வரவுசெலவுத்திட்டமென்றே கூறவேண்டும்.
ஆனாலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளை பிரதிநிதித்துவப்படுத்துபவன் என்ற வகையில் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இன்னமும் மீளக்குடியேற வேண்டும். அவர்கள் தொடர்பில் எந்தவொரு முன்மொழிவுகளும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல மீளக்குடியமர்த்தப்படவுள்ளவர்கள் தொடர்பாக எந்தவிதமான முன்மொழிவுகளும் ஒதுக்கீடுகளும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் இல்லை என்பது கவலைக்குரிய விடயம்.
ஆகவே எல்லா அரசும் ஏதோ ஒரு வகையில் மறந்து போகிறார்கள் என்பதைத்தான் எனக்குக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த வரவுசெலவுத் திட்டத்திலும் கூட தமிழ் மக்களுக்கான குறைந்த பட்சம் மீள்குடியேற்றம் தொடர்பான விடயத்தை மறந்து போயிருக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.