Breaking News

தேர்தலை உன்னிப்பாக கண்காணிக்கும் இந்தியா

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தநிலையில் தேர்தலில் போட்டியிடும் யாருக்கும் சார்பான கருத்துக்களை இந்தியா வெளியிடவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
எனினும் இந்திய அரசாங்கத்தரப்புக்களை கோடிட்டு வெளியிடப்பட்டுள்ள கருத்தில் தேர்தலின் மூலம் பொறிமுறை மாற்றம் ஒன்றை இந்தியா விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழர் விடயத்தில் தீர்வை தராமை மற்றும் சீனக்கொள்கை என்ற விடயங்களை பொறுத்த வரை இந்தியா, மஹிந்த ராஜபக்சவை இழக்க விரும்பும் என்ற நிலையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துடன் இந்தியா தமது செயற்பாடுகளை மேற்கொண்டது. 

அதேபோல புதிதாக தெரிவு செய்யப்படும் அரசாங்கத்துடனும் இந்தியா உரிய வகையில் செயற்படும் என்று அரசாங்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிரணியானது கூட்டணி என்றபடியால் மைத்திரிபால சிறிசேன அனைத்து விடயங்களையும் நிறைவேற்ற முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே அனைத்தும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று இந்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உட்பட்டவர்கள் இந்திய சார்புகொள்கையை கொண்டவர்கள் என்று இந்திய அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.