Breaking News

மைத்திரிக்கு வாக்களியுங்கள் -சீ.வி.விக்னேஸ்வரன்

அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து மைத்திரிபால சிறிசேனாவை வெல்ல வழிவகுங்கள்! அரசாங்கம் இராணுவத்தைக் கொண்டு தடைசெய்யலாம். ஆனால் நீங்கள் உங்கள் ஜனநாயக உரிமையை விட்டுக் கொடுக்காதீர்கள். என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்  தெரிவித்துள்ளாா்.


தமிழர்கள் நாம் துன்பம் அனுபவிக்கும் போது சிங்கள மக்கள் வாளாதிருந்தனர். எமக்கு தமிழர்களான அவர்களுடன் தொடர்பில்லை என்று நினைத்திருந்தனர். ஆனால் எமக்கு நடந்தவை அவர்களுக்கு நடக்கும் போது தான் அவர்கள் இன்று ஜனநாயகம் பற்றிப் பேசுகின்றார்கள்.

நாம் அவ்வாறல்லாமல் எக்காலத்திலும் ஜனநாயக உணர்வு பூண்டவர்கள் என்பதை உலகறியச் செய்ய வேண்டும். நாம் ஜனநாயகத்தை வேண்டி நிற்பதால் வேட்பாளர் தோற்றால் கூட நாம் தலை நிமிர்ந்து நிற்கலாம். நீங்கள் ஒவ்வொருவரும் போங்கள்.

அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து மைத்திரிபால சிரிசேனாவை வெல்ல வழிவகுங்கள்! அரசாங்கம் இராணுவத்தைக் கொண்டு தடைசெய்யலாம். ஆனால் நீங்கள் உங்கள் ஜனநாயக உரிமையை விட்டுக் கொடுக்காதீர்கள். என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முதலi மச்சர் இன்றைய தினம் மாலை அனுப்பியிருக்கும் செய்திக் குறிப்பிலேயே மேற்படி விடயம் தொடர்பில் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

குழப்பமான சூழலில் நாம் தற்போது வாழ்ந்து வருகின்றோம். தமிழ்ப் பேசும் மக்கள் என்பதால் நாம் அழுத்தங்களுக்குள்ளாகியுள்ளோம், அச்சுறுத்தப்பட்டுள்ளோம், பாகுபாட்டுக்குள்ளாக்கப்பட்டுள்ளோம். எமது பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படக் கூடும் என்ற எண்ணத்தை நாம் எட்ட முடியாதுள்ளது.

இந்த நேரத்தில் தான் ஜனாதிபதித் தேர்தல் எம்மிடையே முகம் காட்டியுள்ளது. எவ்வழியில் நாம் செல்ல வேண்டும்? உங்களைப் போல் என் மனதிலும் ஆசுரா, ஆளுசா, வேறு ஒரு போட்டியாளரா அல்லது தேர்தலைப் பகிஷ்கரிப்பதா என்பது போன்ற பல எண்ணங்கள் எழுந்து குழப்பத்தை ஊட்டி வந்துள்ளன.

ஆனால் ஆர அமர இருந்து விசாரித்த பின்னர் தமிழ்ப் பேசும் மக்களாகிய எங்களுக்கு, அதாவது வடகிழக்குத் தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர், கொழும்புத் தமிழர், பிற மாகாணத் தமிழர் யாவர்க்கும் இருக்கும் ஒரே ஒரு வழி பொது வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து அவரின் அடையாளச் சின்னமாகிய அன்னப்பட்சிக்கு வாக்களிப்பதே சாலச் சிறந்தது என்று புலப்படுகிறது. என்னுடைய தீர்மானத்திற்கான காரணங்களைச் சுருக்கமாகக் கூறிவிடுகின்றேன்.

அதற்கு முன், பல கட்சிகளைக் கொண்ட எமது கூட்டமைப்பானது ஏற்கனவே மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானித்திருப்பதை முதலில் கூறிவைக்கின்றேன்.

அவர்கள் தீர்மானம் சரியோ பிழையோ என்பது முக்கியமல்ல. சரி பிழை கூறுவோர் கூட மகிந்தவுக்கே வாக்களிக்க வேண்டும் என்று திடமாகக் கூறாதிருப்பதை நாங்கள் அவதானிக்க வேண்டும்.

இதை ஏன் கூறுகின்றேன் என்றால் எமது தமிழ்ப்பேசும் மக்கள் ஒற்றுமைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக இதுவரை காலமும் வாழ்ந்து வரவில்லை. அதனால் எமக்கெதிரானவர்கள் எங்கள் ஒற்றுமையின்மையைத் தமக்குச் சாதகமாகப் பாவித்து வந்துள்ளனர்.

இந்தச் செயற்பாடு சுதந்திரத்திற்கு முன்பிருந்தே வழக்கில் இருந்து வந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் நாம் ஐக்கியத்துடன் ஒன்றுபட்டு முன்னேறுவதே எமது தலையாய கடப்பாடு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் எடுத்துக் கொண்ட தீர்மானத்திற்கு எதிராகச் செயற்படுவது எம்மை அரசியல் ரீதியாக வலுவற்ற, ஒரு பிரிவுபட்ட பிரிவினராக உலகத்திற்கு எடுத்துக் காட்டும். நாம் அரசியலில் ஏதேனும் பெற வேண்டும் என்றால் எமது ஐக்கியம் மிக மிக முக்கியம். ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் நாம் ஆளாளுக்கொரு கூற்றுரைப்பது, எம்மை ஆள்பவர்களுக்குத் தான் நன்மையைப் பயக்கும்.

எமது ஐக்கியத்தின் மூலம் அரசியல் ரீதியாக நாம் பலம் மிக்க ஒரு பிரிவினர் என்பதை எடுத்துக் காட்டவேண்டும். எமது ஐக்கியம் தெற்கில் உள்ளவர்களின் அரசியல்க் கூட்டுக்களை வடிவமைக்கக் கூட உதவலாம். நாம் ஒவ்வொருவரும் தயங்காது சென்று, வரும் 8ந் திகதி வாக்களிப்பது எமக்கு அரசியல் ரீதியாக ஒரு மரியாதையைக் கொடுக்கும்.

அரசியல் பேரத்திற்கும் எம்மை ஆயத்தப்படுத்தும். உதித்து வரும் புதிய ஜனநாயக சூழலையும் இப் புதிய சூழலில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதிலும் நாம் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று எண்ணுகின்றேன்.

எமது சகோதர சகோதரி உறுப்பினர் சிலர் எமது மக்களை சுதந்திரமாகத் தாம் நினைத்தவாறு வாக்களிக்க விட வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறியுள்ளனர். இதில் முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் எவருமே, நான் முன்னர் கூறியது போல், மூன்றாம் முறை வர எத்தனிக்கும் தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்களியுங்கள் என்று வெளிப்படையாகக் கூறவில்லை.

மாறாக தற்போதைய ஜனாதிபதியின் கீழ் எமது இனம் அடைந்த தாங்கவொண்ணா அவலங்கள் பற்றியே அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எமது தமிழ்க் குடிமக்கள் சார்பான மக்கள் குழுவும் அவ்வாறே கூறியுள்ளனர். மகிந்தவின் கீழான எமது இன ஒடுக்க நடவடிக்கைகள் பற்றி சகலரும் பிரஸ்தாபித்துள்ளனர்.

அப்படியானால் அத்தகைய அவலங்களைத் தரும் ஆட்சியை மாற்ற வேண்டியது எமது தலையாய கடமையல்லவா? தேர்தலைப் பகிஷ்கரிப்பதாலோ, முகவரியில்லாத வேட்பாளருக்கு முன்னின்று வாக்களிப்பதாலோ, வாக்கைச் சிதைப்பதாலோ கொடுங்கோல் குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரலாமா? முடியாது.

இவை அனைத்தும் சிங்கள மக்களின் பெரும்பான்மையர் வாக்குகளைப் பெறக் கூடிய தற்போதைய ஜனாதிபதிக்குச் சார்பானதாவே அமையும். எங்கள் வாக்குக்கு மதிப்பு ஏற்பட வேண்டுமானால் எதிரணிப் பொது வேட்பாளருக்கு நாங்கள் எங்கள் வாக்குகளை அளிப்பதாலேயே நாம் மதிப்பையும் பெற்று மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ளலாம். இதை எமது மக்கள் தமது சிந்தைக்கெடுக்க வேண்டும்.

இதுவரை பதவியில் உள்ளவர் செய்தவற்றை எதிரணி வேட்பாளர் தொடர்ந்து செய்ய மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம் என்பதே எமது சகோதர சகோதரிகளின் அடுத்த கேள்வி. அதற்குத் தமிழர்கள் எவராலும் உத்தரவாதம் கொடுக்க முடியாது. ஆனால் தமிழர்களை ஏமாற்றி அல்லது தமிழர்கள் ஏமாந்ததால் பதவிக்கு வந்தவரே மகிந்த அவர்கள்.

நாம் 2005ம் ஆண்டுத் தேர்தலில் வாக்கிடாது விட்டதால் வளமான வாழ்க்கையைப் பெற்றவர் அவர். வந்தபின் குடும்ப ஆட்சியை நிறுவியுள்ளார். 2005ல் தனக்கு மறைமுகமாக ஆதரவு தந்தவர்களை “பயங்கரவாதிகள்” என்று தொடர்ந்து கூறியே தனக்குச் சார்பாகச் சிங்கள வாக்குகளைப் பெற்று வருபவர் அவர்.

ஆனால் மைத்திரிபால அப்படியல்ல. தமிழர்களை ஏமாற்றித் தனது பதவியை வகிக்க அவர் எத்தனிக்கவில்லை. அத்துடன் அவருக்குச் சார்பாக சிறுபான்மையினர் பலர் ஒன்று சேர்ந்துள்ளனர். எமது முஸ்லிம் சகோதரர்களும் மனோ கணேசன் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையகச் சகோதரர்களும் மைத்திரிபாலாவுக்குப் பக்க பலமாக இருக்கின்றார்கள்.

எனவே ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை மக்கட் குழாத்தினை சிரிசேன அவர்களால் ஓரம் கட்ட முடியாது போகும். ஜனநாயகம், ஒற்றுமை, ஒன்று சேர்தல் போன்ற பிரயோகங்களையே அவர் பாவித்து வருகின்றார். அவரால் அராஜகத்தையும் பெரும்பான்மையினரின் ஏகோபித்த அரசியலையும் ஆதரிப்பது கடினமாக இருக்கும்.

அதுமட்டுமல்ல. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றவும் அவர் முன்வந்துள்ளார். நீதித்துறையையும் அரசாங்கப் பொதுச் சேவைகளையும் அரசியல் அடிமைத்தனத்தில் இருந்து அகற்றி வைக்கவும் முன்வந்துள்ளார்.

எனவே அவர் தலைமைத்துவத்தின் கீழ் எமக்கெதிரான பாகுபாட்டு அரசியலைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்பதே எனது கணிப்பீடு. இதுவரை காலமும் தமிழ்ப் பேசும் மக்கள் அனுபவித்த அராஜகத்தின் பாதிப்பை தற்போது சிங்கள மக்களும் அனுபவிப்பதாலேயே பொது எதிரணி வேட்பாளர் என்ற ஒருவரை அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள்.

ஆகவே அவர்கள் நிட்சயமாக ஜனநாயகம் நோக்கி நடைபோட வேண்டிய ஒரு கடப்பாட்டினை கொண்டவர்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது. அத்துடன் மைத்திரி ஒரு விவசாயியின் மகன். பொலநறுவையைச் சேர்ந்தவர். வாழ்விடங்கள் பற்றியும் வாழ்வாதாரங்கள் பற்றியும் அறிந்த ஒருவர் அவர் என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வேறு சிலர் வேறு பல விவாதக் கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள். அதாவது உலக அரங்கங்களில் நாம் இதுவரை பெற்ற உத்வேகத்தை நாம் இழந்து விடக் கூடும் என்கின்றார்கள். ஆனால் முடுக்கிவிட்ட முன்னைய செயற்பாடுகள் சர்வதேச அரங்கங்களில் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டே இருப்பன.

நாம் வெளிநாட்டுத் தாபனங்களின் உதவியை நாடியது உள்ள+ரில் நிலைமை பக்கச் சார்பாக உருவெடுத்தது என்பதால் அல்லவா? நிலைமையைச் சீர்படுத்தி நீதித்துறையை முன்போல முதிர்ச்சியுடனும் முன்மாதிரியாகவும் ஆக்கத் தலைப்பட்டால் அது நடைபெறப் பல மாத காலங்கள் ஆகும். அதற்கிடையில் ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபை தமது செயல்ப்பாடுகளைப் பரிபூரணமாகச் செயற்படுத்திவிடும்.

இன்னுமொரு வாதம் என்னவென்றால் சிங்கள அடிப்படை வாதக் கட்சிகள் மைத்திரியுடன் சேர்ந்துள்ளதால் எமக்கு எதுவுமே கிடைக்காது என்பது. ஒருவரை நாம் ஒரு தேர்தலில் ஆதரிக்கும் போது அவரின் அனைத்து நண்பர்கள், நலன் விரும்புவோர், நாடிவருவோர் யாவரையும் நாம் ஆதரிக்கின்றோம் என்று பொருளல்ல.

ஆகவே நாம் மைத்திரிபாலவுக்கு வாக்களித்தால் அது ஜாதிக ஹெல உருமையினருக்கு வாக்களித்தது போன்றது என்பது பிழையான வாதம். உண்மையில் அவர்களைப் போன்றவர்கள் ஒரே அணியில் இருப்பது ஒரு வரப்பிரசாதம் என்றே கொள்ள வேண்டும்.

எத்தனை சிக்கலான வழக்குகளில் மூர்க்கத்தனமாக முரண்டு பிடித்த தரப்பனரை எம் போன்ற நீதிபதிகள் ஒரு ஐக்கியமான செயற்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். உதாரணத்திற்கு இணுவில் கந்தசாமிக் கோவில் வழக்கு எத்தனை வருடங்களாக இழுபட்டு இழுபட்டு எம் காலத்தில் அது ஒரு சுமுகமான தீர்வைக் கண்டது?

ஆகவே எம்மை எதிர்க்கும் ஜாதிக ஹெல உருமையினர் கூட ஜனநாயகத்தை வரவேற்பதால் எம்மால் அவர்களுடன் பேசித் தீர்க்க இது ஒரு சந்தர்ப்பமாக அமையும் என்பதை எம் மக்கள் மறக்கக் கூடாது.

இன்றைய குடும்ப ஆட்சிக்கு எதிரான வாக்கு ஜனநாயகத்திற்கு அளிக்கப்படும் வாக்கு. நாம் துன்பம் அனுபவிக்கும் போது சிங்கள மக்கள் வாளாதிருந்தனர். எமக்கு தமிழர்களான அவர்களுடன் தொடர்பில்லை என்று நினைத்திருந்தனர். ஆனால் எமக்கு நடந்தவை அவர்களுக்கு நடக்கும் போது தான் அவர்கள் இன்று ஜனநாயகம் பற்றிப் பேசுகின்றார்கள்.

நாம் அவ்வாறல்லாமல் எக் காலத்திலும் ஜனநாயக உணர்வு ப+ண்டவர்கள் என்பதை உலகறியச் செய்ய வேண்டும். நாம் ஜனநாயகத்தை வேண்டி நிற்பதால் வேட்பாளர் தோற்றால்க் கூட நாம் தலை நிமிர்ந்து நிற்கலாம்.

ஆகவே எனதருமை சகோதர சகோதரிகளிடம் நான் வேண்டுவது யாதெனில் நேரத்திற்கு வாக்களிக்க நீங்கள் ஒவ்வொருவரும் போங்கள். அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து மைத்திரிபால சிரிசேனாவை வெல்ல வழிவகுங்கள்! அரசாங்கம் இராணுவத்தைக் கொண்டு தடைசெய்யலாம்.

ஆனால் நீங்கள் உங்கள் ஜனநாயக உரிமையை விட்டுக் கொடுக்காதீர்கள். எம்மைக் குறி வைத்து மலையகத்தைச் சேர்ந்த தமிழர்கள் இருவர் அரசாங்க அனுசரணையுடன் அனுப்பப்பட்டுள்ளதாக நேற்று கேள்விப்பட்டேன். மனிதர்களைப் பலியிடவா அல்லது யாழ் நூலகம் போன்றவற்றை எரிக்கவா அவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள் என்பதை நானறியேன்.

ஆனால் இப்பேர்ப்பட்ட காரியங்களினால் எம் மக்கள் துவண்டு விடாது எவ்வாறு எம்மை வடமாகாண சபைக்குப் பெருவாரியாக வாக்களித்து வெற்றிபெறச் செய்தீர்களோ அவ்வாறே வெற்றி பெற மைத்திரிபாலவுக்கு வாக்களியுங்கள்!

வடமாகாண சபையை முடக்கப் பார்த்த இன்றிருக்குஞ் ஜனாதிபதியைத் தமது இருக்கையை விட்டு வெளியேற்ற ஒன்று திரண்டு வாருங்கள்!

இறைவன் அருள் உங்கள் ஒவ்வொருவருக்கும் என்றென்றும் இருக்கும்! அதனால் நீங்கள் எந்தவிதத் தடங்கலும் இன்றி தவிப்பும் இன்றி தடையும் இன்றி எதிரணி பொது வேட்பாளருக்கு வாக்களித்து வெல்லப் பண்ணலாம்! வேறு சிந்தனைகள் இன்றி வெற்றிக்கு வழிவகுப்பீர்களாக!