நாட்டை வழிநடத்த நல்ல தலைவர் இன்று இல்லை-சம்பந்தன் பேட்டி
அனைவரும் ஒருமித்து, நியாயமான முடிவுக்கு வருவதற்கு
நாம் எத்தனிக்க வேண்டும். அந்த இலக்கை அடைய முடியாது என நான் கூறமாட்டேன். அதனை அடைவதற்கு வழிபிறக்கலாம். ஆனால் அனைத்து மக்களையும் வழிநடத்துவதற்குரிய ஒரு பக்குவமான தலைவர் இந்த நாட்டில் இன்று இல்லை என சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தற்போதிருக்கும் தலைவரால் அக்கருமத்தை மேற்கொள்ள முடியாது.
அவர் அதனை நிறைவேற்ற மாட்டார் என்ற உறுதியான கருத்தைக் கொண்ட காரணத்தால் தான் நாம் மாற்றம் வருவதை விரும்புகின்றோம்.வன்முறையற்ற சூழலில் பக்குவமான தலைவர் ஒருவர் நாட்டின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்பாராயின் அது மிகச்சிறந்த சந்தர்ப்பமாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணிகளின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக பகிரங்கமாக அறிவித்திருந்த நிலையில் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு;
கேள்வி:- ஜனாதிபதி தேர்தலுக்கு ஒன்பது தினங்கள் காணப்படும் நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை அறிவித்திருந்தது. அம்முடிவை அறிவிப்பதற்கான காலதாமத்திற்கான காரணம் என்ன?
பதில்:- எமது முடிவை எடுப்பதற்கு நாம் அவசரப்படவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத் தரப்பின் வேட்பாளர். அவருடைய கடந்தகாலச் செயற்பாடுகள் தொடர்பாக கடந்த பல வருடங்களாக எமக்கு தெளிவான அனுபவம் இருந்தும் கூட தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அவருடைய நிலைப்பாட்டையும் எதிர்க்கட்சி வேட்பாளருடைய நிலைப்பாட்டையும நாங்கள் அவதானிக்க வேண்டும் என விரும்பினோம்.
வடகிழக்கில் மிகக்கூடுதலான மாவட்டங்களில் உள்ள எமது மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள். விசேடமாக மக்களுடைய காணிகள் நியாயமற்ற முறையில் சுவீகரிக்கப்படுகின்றன. தமது சொந்த காணிகளுக்கு செல்லமுடியாதிருக்கின்றது. அத்துடன் மேலும்பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள்.
தற்போதிருக்கும் நிலைமை முடிவுக்கு வரவேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியிலிருப்பதை நாம் அவதானித்தோம்.
அத்துடன் அந்த நிலைமை ஏற்படுவதற்கு மாற்றம் அவசியம் என்ற கூடுதலான சிந்தனையிருந்ததையும் நாம் கவனமாக அவதானித்தோம். அது நியாயமான நிலைப்பாடு. அதேநேரம் அம்மக்கள் முக்கியமான ஒரு விடயத்தை கருத்திலெடுக்கவேண்டும். குறிப்பாக அவர்களின் உணர்வுகள் எவ்வாறாக காணப்பட்டாலும் அவர்கள் சென்று வாக்களிப்பதென்பது மிகவும் முக்கியமானதாகும்.
இவ்வாறான காரணங்களை நாம் கவனத்தில் கொண்டதன் காரணத்தால் தான் எமது தீர்மானத்தை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.
அத்துடன் மாவட்ட ரீதியில் நாம் பொதுமக்களின் கருத்துக்களையும் பெற்றிருந்தோம். பல்வேறு தரப்பினருடனும் கலந்தாலோசித்திருந்தோம். அதன்பிரகாரம் எமது மக்களின் அதிகூடிய விருப்புக்கு அமைவாக எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்தோம்.
கேள்வி:- பொது எதிரணி என்பது சர்வதேச சமூகத்தின் சதித்திட்டம் என ஆளும் தரப்பு பகிரங்கமாகவே குற் றம் சாட்டியுள்ளதே?
பதில்:- அது தவறான கருத்தொன்றாகும். பொது எதிரணிகளின் வேட்பாளராகவுள்ள மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு எவ்வாறான விடயங்கள் காரணமாக இருந்தன என கூறிக்கொண்டு வருகின்றார். அவர் கூறும் காரணங்களில் உண்மைகள் இருக்கின்றன. நாம் எடுத்த தீர்மானத்திற்கான காரணத்தையும் பகிரங்கப்படுத்தியிருக்கின்றோம்.
நாட்டை, இங்குள்ள மக்களை, பாரா ளுமன்ற முறைமை, ஜனநாயகம் ஆகிய வற்றைப் பொறுத்தவரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை யின் ஊடாக நாடு எவ்வாறான சர்வாதிகாரப்போக்கை அடைந்துள்ளது, பாராளுமன்றம் தரம்குறைந்துள்ளது, உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கின்றது, உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் எவ்வாறு பதவியிலிருந்து விலக்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்த விடயம்.
அடுத்ததாக தேர் தல் தொடர்பாக விடயங்களை எடுத்துக்கொண்டால் நாட்டில் தேர்தல் நடைபெறுகின்றது.
ஆனால் அத்தேர்தலை சுயாதீனமாக நடத்துவதற்கு 17ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட்டு தேர்தல்கள் ஆணையாளருக்கு இருந்த அதிகாரங்கள் இழக்கப்பட்டுள்ளன. பொதுச்சேவை பொலிஸ் சேவை, ஆணைக்குழுக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. மனிதஉரிமைக்குழு, இலஞ்ச ஊழல் தடுப்பு குழு ஆகியவற்றுக்கு நியமிக்கப்படும் அனைவரும் ஜனாதிபதியின் விருப்பத்தின் அடிப்படையிலே நியமிக்கப்படுகின்றார்கள்.
17ஆவது திருத்தச்சட்டம் அரசியலமைப்பில் நடைமுறையில் இருந்த காலம்வரை அரசியல் சாசன சபை ஊடாக அவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட்டன. இவற்றை விடவும் ஜனாதிபதியொருவர் இரண்டு தடவைகள் மட்டுமே பதவிவகிக்க முடியும் என்பதைக் கூட அரசியல் சாசனத்தில் மாற்றியமைத்து மூன்றுமுறையோ அல்லது அதற்கும் அதிகமான தடவைகளோ ஆட்சியில் அமர்வதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நாட்டில் ஊடகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை, சிவில் சமுகம் தமது கருத்துக்களை கூறுவதற்கு அச்சப்படவேண்டிய நிலைமை என ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற போது இந்த நாடு ஜனநாயக ரீதியாக மக்களுக்கு சுதந்திரம் இருக்கக்கூடிய நாடாக இல்லாது சர்வாதிகார போக்கில் பயணிப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
அந்த யதார்த்தத்தின் அடிப்படையில் தான் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திலிருந்து வெளியேறி மேற்குறிப்பிட்ட விடயங்களில் இழைக்கப்பட்ட குற்றங்களை முன்வைத்து தேர்தலில் போட்டியிடுகின்றார்.
இவ்வாறாக ஒவ்வொரு குற்றத்திற்கும் பதில் கூறவேண்டியது அரசாங்கமே. அவ்வாறான குற்றங்கள் நடைபெற்றனவா? இல்லையா? நடந்திருந்தால் ஏன் நடந்தது? எவ்விதமாக அவற்றை நியாயப்படுத்தலாம் என கருமங்களை அரசாங்கமே கூறத்தலைப்பட்டிருக்கின்றது. அதனை விடுத்து இக்குற்றங்களுக்கு ஒட்டுமொத்த பதிலாக சர்வதேச சதி என கூறுவதை எவரும் ஏற்றுக்கொள்ளமுடியாது. சிந்தனையுள்ள மக்கள் கூட்டமும் ஏற்றுக்கொள்ளாது.
கேள்வி:- தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தற்போதைய அரசாங்கம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை அணுகியிருந்ததா?
பதில்:- அவர்கள் எவ்விதமான தொடர்பையும் எம்முடன் கொள்ளவில்லை. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ ஊடகங்களுக்கு வழங்கிய செய்திக்குறிப்பில் என்னை தொடர்புகொண்டிருக்க முடியவில்லையெனக் குறிப்பிட்டிருக்கின்றார். எவ்வாறாயினும் என்னுடனோ அல்லது தமிழ்த்தேசியக் கூட்ட மைப்புடனோ அரசாங்கம் தொடர்புகளை ஏற்படுத்த எவ்விதமான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கவில்லை.
கேள்வி:- தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ்வித இணக்கமுமின்றி ஒப்பந்த மும் இன்றி எப்படி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளிக்கலாம். உண்மை நிலையினை தெற்கு மக்களுக்கும் கூறாது வடக்கு மக்களுக்கும் கூறாத நிலையே காணப்படுகின்றது என பாது
காப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளாரே?
பதில்:- எமக்கு இரகசிய ஒப்பந்தங்கள் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கையில் லை. எமது நிலைப்பாட்டை ஆளும் தரப்புக்கும் தெரிவித்திருக்கின்றோம். எதிரணிக்கும் தெரிவித்திருக்கின்றோம். அந்த நிலைமை தொடரும்.
கேள்வி:- அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய, அமைச்சர் பஷில் ராஜபக் ஷ போன்றவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கவேண்டும் எனக் கோரியுள்ளார்களே?
பதில்:- நாங்கள் பட்ட அனுபவங்கள் போதுமானதாக இருக்கின்றது. அதனடிப்படையில் சிந்தித்தே முடிவை எடுத்திருக்கின்றோம்.
கேள்வி:- தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதற்கு அப்பால் வடகிழக்கு மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக பொது எதிரணியால் குறைந்த பட்சம் வாக்குறுதிகளாவது கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளதா?
பதில்:- நாம் பேசவேண்டியவர்களுடன் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தை மேற்கொண்டிருக்கின் றோம். ஆனால் தேர்தலுக்கு முன்பதாக ஒப்பந்தங்களைப் மேற்கொண்டு இப்பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை எட்டி விடலாம் என நாம் கருதவில்லை. அத்துடன் இரகசிய ஒப்பந்தங்கள் ஒருபோதும் வெற்றியைத் தரப்போவதுமில்லை.
நாம் முடிவெடுக்கவேண்டிய நிலையில் இருக்கின்ற போது யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னரான சமீப காலத்தில் எமக்கு கிடைத்த அனுபவங்கள், எமது மக்களின் அனுபவங்கள், அதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்களின் பிரகாரம் ஒரு மாற்றம் ஏற்பட்டால் அம்மாற்றத்
தின் ஊடாக ஏற்படக்கூடிய புதிய நிைல
வரங்கள் தொடர்பில் வெகுவாக சிந்தித்து அவற்றை தொடர்ந்து வலியுறுத்தி எமதுகருமங்களை முன்னெடுக்கவுள்ளோம்.
அவ்வாறிருக்கையில் இரகசிய ஒப்பந்தங்கள் மூலம் இக்கருமங்களை மேற்கொள்ளமுடியும் என நாம் கருதவில்லை. விசேடமாக நான் அதனை விரும்பவில்லை. அவர்களும் நாங்களும் விடயங்
களை புரிந்துகொள்ளவேண்டும். எமது மக்கள் உட்பட இந்த நாட்டில் வாழும் அனைவருக்கும் இடையில் புரிந்துணர்வு அவசியம்
அதனடிப்படையில் அனைவரும் ஒருமித்து நியாயமான முடிவுக்கு வருவதற்கு நாம் எத்தனிக்க வேண்டும். அந்த இலக்கை அடைய முடியாது என நான் கூறமாட்டேன்.
அதனை அடைவதற்கு வழிபிறக்கலாம். ஆனால் முக்கியமான
தொருதேவை காணப்படுகின்றது. நாட்டு மக்களை வழிநடத்துவதற்கு ஒரு பக்குவமான தலைவர் இருக்க வேண்டும். அனைத்து மக்களையும் வழிநடத்துவதற்குரிய ஒரு பக்குவமான தலைவர் இந்த நாட்டில் இன்று இல்லை. ஆகவே தான் இக்கருமங்கள் இழுத்தடிப்புச் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
கொடூரமான யுத்தம் 30வருடங்களாக நடைபெற்றது. நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டன. அதன் பின்னரான சூழ்நிலையில் மக்கள் நியாயமான சமாதானத்தை விரும்ப வேண்டும். அவ்விதமான சமாதானம் ஏற்படுவதற்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்படவேண்டும். வன்முறையற்ற சூழலில் பக்குவமான தலைவர் ஒருவர் நாட்டின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்பாராயின் மிகச்சிறந்த சந்தர்ப்பமாக அமையும்.
அவ்வாறிருக்கையில் தற்போதிருக்கும் தலைவரால் அக்கருமத்தை மேற்கொள்ள முடியாது. அவர் அதனை நிறைவேற்ற மாட்டார் என்ற உறுதியான கருத்தைக் கொண்ட காரணத்தால் தான் நாம் மாற்றம் வருவதை விரும்புகின்றோம்.
கேள்வி:- தேசிய அரசாங்கமொன்று அமையப்பெறும் சந்தர்ப்பத்தில் தமிழ் மக் கள் சுய கௌரவத்துடன் சுயநிர்ணய அடிப்படையிலான அபிலாஷைகளை பெறும் இலக்கு நோக்கி பயணிப்பதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கவிருக்கின்றது?
பதில்:- தற்போதைய சூழலில் இவ்விடயம் தொடர்பாக நாம் பேசமுடியாது. இருப்பினும் தேர்தல் நிறைவடைந்த தும் இவ்விடயம் தொடர்பாக நாம் சிந்
திக்கவேண்டியிருக்கின்றது. அத்தருணத் தில் உருவாகும் நிலைமைகளின் அடிப் படையில் எமது மக்களுக்கு பூரண நன்மை பயக்கக் கூடிய தீர்மானமொன் றை எடுப்போம்.
கேள்வி:- அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் அச்சட்டத்தில் அதியுச்சமாக காணப்படும் காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ள ஜாதிக ஹெல உறுமய பொது எதிரணியில் பங்காளியாக காணப்படுகின்றதே?
பதில்:- நாம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் போது ஜாதிக ஹெல உறுமய அதன் பங்காளியாக இருந்தது. அவர்கள் இருக்கின்ற காரணத்தினாலோ அல்லது அவர்கள் தற் போது வெளிப்படுத்தும் காரணத்தின் நிமித்தம் நாம் பொது எதிரணிகளின் வேட்பாளருடன் பேசமுடியாது எனக் கூறமுடியாது. நாம் அனைவருடனும் பேசுவதற்கு தயாராக இருக்கின்றோம்.
எங்களுடைய கோரிக்கைகளை அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் முன்னெடுப்போம். கருத்துகள், நிலைப்பாடுகள், நியாயத்தின் அடிப்படையில் கூடுதலான ஆதரவின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படவேண்டும்.
ஆகவே அக்காரணங்களை காட்டி நாம் எதிலுமே பங்குபெற முடியாது எனக் கூறமுயாது. அதற்காக நாங்கள் சில அடிப்படைக் கருமங்களில் உறுதியாக நிற்கவேண்டியது எமது பொறுப்பு.
கேள்வி:- இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறிருக்கின்றது?
பதில்:- இலங்கைத் தமிழர்களுக்கு கௌரவமான நியாயபூர்வமான அபிலாஷைகளை நிறைவேற்றப்படக்கூடிய வகையில், இந்தியாவில் வாழும் பல்லின மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து
வந்த பிரதேசங்களில் எவ்விதமான சுயாட்சிமுறை அவர்களுக்கு இருக்கின் றதோ அவ்விதமான ஒருமுறையூடாகவா
வது அரசியல் தீர்வொன்று ஏற்படவேண்டும் என்ற எண்ணம் அவர்களிடத்தில் காணப்படுகின்றது.
அதனை அடைவதற்காக இந்திய மத்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தை மிகவும் கடுமையாக தூண்டிவந்தது. அச்சமயத்தில் இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திற்கு சிலவிதமான வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. ஆனால் அதனை அவர்
கள் நிறைவேற்றவில்லை. இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பு தொடரும். அதில் எமக்கு நம்பிக்கையுண்டு. இந்த நாட்டில் எதிர்வரும் காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளின் அடிப்படையில் இந்தியத் தரப்பினர் தமது நிகழ்வுகளை வகுத்துக்கொள்வார்கள்.
கேள்வி:- ஜனாதிபதி தேர்தலுக்கு குறுகிய கால இடைவெளியொன்றே காணப்படுகின்றது. இந்த கால இடைவெளியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மக்களை வாக்களிப்பதற்கு ஊக்குவிப்பதற்கு
எவ்வாறான செயற்போடுகளை மேற் கொண்டுள்ளது. அதேநேரம் வடமாகாண தேர்தலின் போது வாக்களர்களுக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டிந்தன. இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் மக்களின் சுயாதீன செயற்
பாட்டை உறுதி செய்வதற்கு எவ்வா றான செயற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன?
பதில்:- எமது அமைப்புக்கள் ஊடாக பல்வேறுபட்ட செயற்பாடுகள் முன்னெ
டுக்கப்படுகின்றன. எதிர்வரும் தினங்க ளில் அதனை மேலும் விரிவுபடுத்து வதற்குரிய நடவடிக்கையை மேற்கொள் வோம்.
அந்நிலையில் எமது மக்களிடம் நான் அன்பான கோரிக்கையொன்றை முன் வைக்கின்றேன். மக்கள் மிகவும் கூடுதலான அளவில் வாக்களிக்கவேண்டும். அதற்குரிய சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
எதிரணியின் பொதுவேட்பா ளர் மைத்திபால சிறிசேனவின் அன்னப் பறவைச் சின்னத்திற்கு வாக்களித்து இந்த நாட்டின் ஆட்சியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
இதுவரையில் இருந்து வந்த அரசாங்கம் எமது மக்களுக்கு நீதியை செய்யும் அல்லது நியாயத்தை வழங்கும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. அது கடந்த கால அனுபவம். ஆகவே மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எமது மக்களும் உதவியளிக்கவேண்டும்.
இந்த நாட்டில் உள்ள சகல மக்களின் ஜனநாயக உரி மையை பிரயோகிப்பதன் ஊடாக ஏற்பட வேண்டும். அதில் நாமும் பாரியளவில் பங்களிப்பை செய்தோம் என்பதை நிரூபிக்க வேண்டும். அது எமக்கான புதிய பாதையை உருவாக்கும் என்ற நம்பிக் கை எமக்கு உண்டு.
கேள்வி:- தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் போட்டி யிட்ட போது காணப்பட்ட மக்களின் வாக்களிப்பு சதவீதம் தற்போதும் கிடைக்கும் என கருதுகின்றீர்களா?
பதில்:- வடமாகாண சபைத் தேர்தலின் போது மக்கள் எமக்கு பெரும்பன் மையை வழங்குவதற்காக வும் மாகாண சபையூடாக தமது பிரச்சினைகளுக்கு நிவாரணங்கள் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பிலும் வாக்களித்தனர்.
துரதிஷ்டவசமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கத் தினால் செயற்திறன் மிக்கதொரு சபை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இடையூறு அளிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான நிலையில் எமது மக்களை இந்தத் தேர்தலில் அதிகளவில் வாக்களிக்குமாறு கோருகின்றோம். சுதந்திரமான தேர்தலுக்கும் வலியுறுத்துகின்றோம்.