Breaking News

பொதுவேட்பாளருக்கு ஆதரவு கோரி களமிறங்கியது கூட்டமைப்பு

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு திரட்டும் பரப்புரை நடவடிக்கைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று களமிறங்கியுள்ளது.   எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில்  பொது எதிரணி வேட்பாளராக மைத்திரிபால போட்டியிடுகின்றார்.  


 எனவே இந்த நாட்டில் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டும் என்ற கொள்கையின் படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொதுவேட்பாளருக்கே தங்களுடைய ஆதரவை வழங்கியுள்ளது. இந்த நிலையில் நேற்று முதல் மைத்திரிக்கு ஆதரவு திரட்டு பரப்புரைகளை ஆரம்பித்துள்ளது.  

 அந்தவகையில் வடக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களில் நேற்று பரப்புரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொதுவேட்பாளரை ஆதரிப்பதற்கான காரணங்கள்  தொடர்பான விளக்கங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.   எனினும் எதிர்காலத்தில் பொது வேட்பாளரை ஆதரித்து கூட்டங்கள் நடாத்தப்படுவதுடன் வீடுகள் தோறும் சென்றும் பரப்புரைகள் மேற்கொள்ளப்படவும் உள்ளன.    

இதேவேளை, நேற்று முன்தினம் யாழ். மாட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின்  அலுவலகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.   அதில் மைத்திரிக்கு ஆதரவு வழங்குவதற்கான விளக்கம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

அத்துடன் பரப்புரைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் மாவை சேனாதிராசாவினால் பணிக்கப்பட்டது.   அதனையடுத்து நேற்று பரப்புரைகள் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.