Breaking News

கூட்டமைப்பினர் மீது தீவகத்தில் தாக்குதல்

எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரி பாலசிறிசேனவின் ஆதரவு பரப்புரையில் கூட்டமைப்பினர் மீது தீவகத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.    


யாழ்.தீவகப் பகுதியில் கடந்த இரு தினங்களாக ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பரப்புரை மேற்கொண்டு வருகின்றது.   இந்தநிலையில், வடக்கு மாகாண உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் இணைந்து பரப்புரை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.   

சம்பவம் குறித்து வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் தெரிவிக்கையில்,  நேற்றையதினம் வேலணை நேதாஜி சனசமூக நிலையத்திற்கு முன்னால் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தோம். அப்போது தலைக் கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தங்களது கைத்தொலைபேசியில்  யாருடனோ தொடர்பு கொண்டு “கூட்டமைப்புக்காரர் வந்து நிக்கிறாங்கள் உடனே வாங்கடா ” என்றனர்.   

இவற்றை அவதானித்துக் கொண்டிருந்த மக்கள் எங்களை பார்த்து “தம்பி இவர்கள் மிகவும் மோசமானவர்கள் நீங்கள் இங்கிருந்து உடனடியாக கிழம்புங்கள்” என்றனர்.    இதனைத் தொடர்ந்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த எல்லா உறுப்பினர்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு எங்களது வாகனத்தில் ஏறி வந்துகொண்டிருந்தோம்.   அதன்போது,  குறித்த மூவரும் வாகனத்தின் மீது சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தினர். 

உடனே நான் வாகனத்தை விட்டு இறங்கி அவர்களிடம் சென்று ஏன் எதற்காக எம்மை தாக்குகின்றீர்கள் என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள் மிரட்டும் பாணியில் பேசியதுடன்  தகாதவார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டனர். சம்பவங்கள் தொடர்பாக உடனே ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தேன்.   உடனே எங்களை பொலிஸ் நிலையம் வரும்படி பொலிஸார் அழைத்து சேதமுற்ற வாகனத்தையும் பார்வையிட்டு சம்பவம் தொடர்பாக முறைப்பாட்டையும் பதிவுசெய்து கொண்டனர்.   

மேலும்,  சம்பவம் நடைபெற்ற இடத்தையும் நேரில் வந்து பார்வையிட்டதோடு அயலவர்களையும் விசாரித்து தாக்குதல் தொடர்பில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.   எனினும் இவ்வாறு தாக்குதலை நடாத்தியவர்களில் ஒருவர் ஈ.பி.டி.பி கட்சியைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார் .    

இதேவேளை, இன்று இரவு 12 மணியுடன் தேர்தல் பரப்புரைகள் முடிவடையவுள்ள நிலையில் அச்சுறுத்தல்களையும் தாண்டி இன்றும் தீவகத்தில் தேர்தல் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.      அத்துடன் வடக்கு ,கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிரணியின் பொது வேட்பாளரை ஆதரிக்குமாறு பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.